178 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை மகாளய அமாவாசையில் சூரிய கிரகணம் ; நன்மையா? தீமையா?
இந்த மாதம் 14ஆம் திகதி அதாவது நாளையதினம் மகாளய அமாவாசை சனிக்கிழமை வருகிறது. இந்த நாளில் சூரிய கிரகணமும் நிகழ உள்ளது. சனிக்கிழமை நாளில் சூரிய கிரகணமும், மகாளய அமாவாசையும் இணைந்து வருவது பலநூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரக்கூடியது என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
மகாளய அமாவாசை நாளில் நிகழக்கூடிய அரிய சூரிய கிரகணம். 178 ஆண்டுகளுக்குப் பிறகு மகாளய அமாவாசை தினத்தில் இந்த கிரகணம் நிகழ்வதால் இந்த நாளில் நாம் முன்னோர்களுக்கு தரக்கூடிய தர்ப்பணம் பல ஆண்டுகாலத்திற்கு புண்ணியத்தையும் முன்னோர்களின் ஆசியையும் கொடுக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது இந்த நாளில் நாம் முன்னோர்களுக்கு தரும் தர்ப்பணம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னோர்களின் பசியை போக்குமாம். ஒவ்வொரு அமாவாசையிலும் முன்னோர் வழிபாடு செய்ய வேண்டும் என்கிறது சாஸ்திரம்.
குறிப்பாக ஆடி, தை மற்றும் மஹாளய அமாவாசைகளில் முன்னோரை வழிபடுவது மிகவும் சிறப்பாகும். இதுவரை முன்னோர்களை நாம் முறையாக வணங்கியிருந்தாலும் வணங்காமல் போனாலும், புரட்டாசி மகாளயபட்ச அமாவாசையில் மறக்காமல் முன்னோர்களை வழிபடவேண்டும். தர்ப்பணம் செய்யவேண்டும். மூதாதையர்களின் இறந்த தேதி தெரியாதவர்கள் அல்லது மறந்து போனவர்கள் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால் 21 தலைமுறைகளை சேர்ந்த முன்னோர்கள் சொர்க்கத்தை அடைவார்கள் என சொல்லப்படுகிறது.தர்ப்பணம் புரிவோர் நதி அல்லது குளத்தில் நீராட வேண்டும். காசி, பத்ரிநாத், திருக்கோகர்ணம், திலதர்பணபுரி,காவிரி சங்கமம், கயா,திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில், கும்பகோணம் மகாமக குளம், ராமேஸ்வரம் முதலிய இடங்களில் உள்ள தீர்த்தங்களில் நீராடினால் மிகவும் விசேஷமானது.
மஹாளய அமாவாசையின் போது ஏழை எளியோர் ஆதரவற்றோர்க்கு உணவு, உடை போன்றவற்றை தானமாக வழங்கலாம். நவ கிரகங்களில் ஒன்றான சனிபகவானுக்கு எள் விளக்கேற்றி வழிபடலாம். பித்ரு சுமங்கலியாக இறந்திருந்தால் ஏழை. சுமங்கலி பெண்களுக்கு புடவை,தாம்பூலம் போன்றவற்றை வழங்கி ஆசி பெறலாம். பசுமாட்டுக்கு அகத்திக்கீரை, பழங்களை தானமாக அளிப்பதன் மூலம் நம் பாவங்கள் அகலும். முன்னோர்களின் ஆசியால் இதுநாள் வரை தடைபட்டு வந்த காரியங்கள் நடைபெறும். நாம் கொடுக்கும் தர்ப்பணத்தில் மகிழ்ச்சியடையும் முன்னோர்கள் நம்மை ஆசிர்வாதிப்பார்கள். குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்பது ஐதீகம் ஆகும்.