லண்டன்

இலங்கைத் தமிழர்கள் நடுக்கடலில் தனித்தீவில் சிறைவைக்கப்பட்டுள்ள குறித்து பதறவைக்கும் ஒரு செய்தி!

ஒன்றரையாண்டுகளுக்கும் மேலாக பிரித்தானியாவுக்குச் சொந்தமான தீவு ஒன்றில், சிறைவைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களைக் குறித்த பதறவைக்கும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. 2021ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம், கனடாவுக்குச் செல்லும் நோக்கில் புறப்பட்ட இலங்கைத் தமிழர்கள் பயணித்த படகொன்று நடுக்கடலில் சிக்கித் தவிக்க, பிரித்தானிய கடற்படை அவர்களை மீட்டுள்ளது. ஆனால், அவர்கள் பிரித்தானியாவுக்குக் கொண்டு செல்லப்படாமல், பிரித்தானியாவில் கடல் கடந்த பிரதேசமான Diego Garcia என்னும் தீவுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஆரம்பத்தில் இந்த சம்பவத்தைக் குறித்த செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தினாலும், பின்னர் பரபரப்பெல்லாம் அடங்கிப்போனது. அந்தத் தீவில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்கள் ஒன்றரையாண்டுகள் ஆனபிறகும் அங்கேயேதான் இருக்கிறார்கள். நிலைமை மோசமானதே தவிர, நிலைமையில் எந்த முன்னேற்றமும் இல்லை. அந்த மக்கள் இலங்கையில் சந்தித்த துன்புறுத்தல்களுக்குத் தப்பித்தான் படகில் புறப்பட்டார்கள். ஆனால், இலங்கையிலிருந்து வெளியேறியும் துன்புறுத்தல்களிலிருந்து அவர்கள் தப்பமுடியவில்லை. குறைவான இடத்தில், ஒரே கூடாரத்துக்குள் பலர் தங்க வைக்கப்பட்டிருக்க, ஆண்கள் சிலர் தாக்குதல்களுக்கும், பெண்கள் பாலியல் வன்முறைகளுக்கும் ஆளாகியுள்ளார்கள்.

மேலும் இப்படி எங்கேயோ ஒரு தீவில் வந்து சிக்கிக்கொண்டு அனுபவிக்கும் கஷ்டங்களை சகிக்கமுடியாமல் சிலர் தற்கொலை முயற்சி மேற்கொள்ள, அவர்கள் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்ட நாடு ருவாண்டா! பிள்ளைகளின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது, மோசமான நிலையில் கஷ்டப்பட்டுவருகிறோம், தயவு செய்து எங்கள் புகலிடக்கோரிக்கைகளை பரிசீலியுங்கள், எங்களை பாதுகாப்பான நாடொன்றிற்கு அனுப்பி வையுங்கள் என கோரிக்கை விடுக்கிறார் இரண்டு பிள்ளைகளின் தாயாகிய ஒரு பெண்.

இதேவேளை, சில புகலிடக்கோரிக்கையாளர்கள், பிரித்தானிய இந்திய கடல் பிரதேசத்துக்கான ஸ்தானிகரான Paul Candler முதல், அமைச்சர்கள், அதிகாரிகள் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்கள். புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு முறையான அடிப்படைத் தேவைகள் முதல் பாதுகாப்பு வரை வழங்கத் தவறியதுடன், மூன்றாம் தரப்பினரால் ஏற்படும் அபாயங்களிலிருந்தும் அவர்களை பாதுகாக்கும் கடமையில் அரசு தவறிவிட்டதாக அவர்கள் வாதம் முன்வைத்துள்ளார்கள். அத்துடன், மற்றொரு வழக்கில், பாதுகாப்பற்ற முறையில் புலம்பெயர்ந்தோரை பிரான்சுக்கு சொந்தமான ரீயூனியன் தீவுக்கு செல்ல அரசு அனுமதிப்பதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அரசு தரப்பிலும் சரி, தனியார் பாதுகாப்பு அமைப்பு தரப்பிலும் சரி, குற்றச்சாட்டுகள் மறுக்கப்பட்டுள்ளதுடன், தாங்கள் புலம்பெயர்ந்தோரை முறையாக கவனித்துக்கொள்வதாகவும், புகார்கள் முறையாக விசாரிக்கப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Back to top button