இலங்கை

பொலிஸார் தமிழர் வாழும் பகுதியில் அரங்கேற்றிய மற்றுமொரு கொடூரம்; பெண் வைத்தியசாலையில் அனுமதி!

முல்லைத்தீவு விசுவமடு பாரதிபுரம் பகுதியில் வைத்து பொலிஸாரால் அராஜகமாக தாக்கப்பட்டு படுகாயமடைந்த பெண் ஒருவர் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு புதுக் குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாரதிபுரம் பகுதியில் நேற்று புதன்கிழமை (22) பிற்பகல் 3 மணி அளவில் பாதிக்கப்பட்ட பெண் அவரது மகன் பேரக் குழந்தை ஆகியோர் உள் வீதியில் இருந்து பிரதான வீதிக்கு பேருந்துக்காக சென்றனர்.

இந்நிலையில், பாரதிபுரம் கிராம அலுவலர் அலுவலகத்தில் இருந்து வந்த இரு பொலிஸார் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை மறித்துள்ளனர். இதனையடுத்து தாங்கள் மறித்த இடத்திலிருந்து 20 மீற்றர் தள்ளி மோட்டார் சைக்கிளை நிறுத்தியதாகவும் அவ்விடத்திற்கு ஓடி வந்த பொலிஸார் மறித்த இடத்தில் சைக்கிளை நிறுத்த முடியாதா? என கேட்டு மகனையும் பின்னால் இருந்த தாயான பெண்ணையும் கடுமையாக தாக்கியுள்ளனர்.

இச்சம்பவத்தில் படுகாயமடைந்த தாய் உடனடியாக தரும்புரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதேவேளை சம்பவ இடத்திலிருந்து பொலிஸார் உடனடியாக வெளியேறியதோடு, காயமடைந்த பெண் மற்றும் அவரது மகன் பேரக்குழந்தை மோட்டார் சைக்கிள் என்பவற்றையும் அங்கேயே விட்டு அங்கிருந்து சென்றதாக கூறப்படுகின்றது.

Back to top button