இலங்கை மக்களின் கழுத்தை நெறிக்கும் மற்றுமொரு சட்டமூலம் சற்றுமுன் நிறைவேற்றம்
இலங்கையில் வட் எனப்படும் பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் மேலதிக 57 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 98 பேரும் எதிராக 41 பேரும் வாக்களித்துள்ளனர். இதேவேளை, முன்னாள் அமைச்சரும் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினருமான ரொஷான் ரணசிங்கவும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து சபையில் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்திருந்தார்.
இந்தச் சட்டமூலம் நேற்று ஞாயிற்றுக்கிழமை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முதலில் திட்டமிடப்பட்டிருந்தது, அந்த வகையில் பெறுமதி சேர் வரி திருத்தம் சட்டமூலம் மற்றும் நிதிச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நேற்று காலை சபையில் ஆரம்பமானது. இதன் போது 138 பொருட்களில் 97 பொருட்களுக்கு வட் எனப்படும் பெறுமதி சேர் வரி விதிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். அரச வருவாயை அதிகரிக்கும் முயற்சியில், வரியிலிருந்து விலக்களிக்கப்பட்ட 97 பொருட்களுக்கு மீண்டும் வரி அறவிடப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இருப்பினும் போதிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருகை இல்லாத காரணத்தினால் (கோரம் இல்லாத காரணத்தினால்) நாடாளுமன்ற அமர்வு பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷவினால் இன்று காலை 9 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
மேலும் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர், அனுப்பப்படும் குறுஞ்செய்திகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், நிலையான தொலைபேசி வலையமைப்புகளில் குறுந்தகவல் சேவைக்கும் வட் வரி விதிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மருந்துகள், மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் உபகரணங்கள், அரிசி மா , கோதுமை மா, காய்கறிகள், பழங்கள், திரவ பால் மற்றும் சுவசேரிய எனப்படும் நோயாளர் காவு வண்டி சேவை ஆகியவற்றுக்கு வட் எனப்படும் பெறுமதி சேர் வரி விதிக்கப்படாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய சுட்டிக்காட்டினார். இந்த நிலையில் இன்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலம் இன்று மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் ஆகியோர் இந்த சட்டமூலம் மீதான வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.