அனைத்து வட மாகாண சுகாதார ஊழியர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை
கடமை நேரத்தில் மருத்துவர்கள் உட்பட சுகாதாரப் பணியாளர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு வட மாகாண மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் தடை விதித்துள்ளது. வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி. சத்தியமூர்த்தி இவ்விடயம் குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். அதாவது “சில சுகாதார ஊழியர்கள் தங்கள் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தி நோயாளிகளைப் பார்ப்பதற்குப் பதிலாக சமூக ஊடக தளங்களில் நேரத்தை செலவளிப்பதாக குற்றம் சுமத்தப்பட்ட பல முறைப்பாடுகளை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து மேலும் “எவ்வாறாயினும், இந்த தடை குறிப்பாக கடமை நேரத்தில் சமூக ஊடக பயன்பாட்டிலிருப்பவர்களுக்கு மாத்திரமே பொருந்தும் என்றும் சட்டபூர்வமான வேலை தொடர்பான நோக்கங்களுக்காக மொபைல் போன்களை பயன்படுத்துவதை கட்டுப்படுத்தாது” என்றும் டாக்டர் சத்தியமூர்த்தி கூறினார்.
“சுகாதார ஊழியர்கள் தங்கள் மொபைல் சாதனங்களை தகவல் தொடர்பு, மருத்துவ ஆதாரங்களை அணுகுதல் மற்றும் பிற அத்தியாவசிய பணிகளுக்கு பயன்படுத்த இன்னும் அனுமதிக்கப்படுகிறார்கள்” என்று அவர் எடுத்துரைத்தார். இந்த தடையானது சுகாதார ஊழியர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை மீறும் நோக்கத்தில் இல்லை என்றும், மாறாக நோயாளிகளிடம் அலட்சியமாக நடந்து கொள்ளும் பிரச்சனையை தீர்க்கும் நோக்கத்தில் இருப்பதாகவும் அந்த அதிகாரி மேலும் தெளிவுபடுத்தினார்.
கடமையில் இல்லாத நேரங்களில் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்துவதற்கு எவ்விதத் தடைகளும் இல்லை எனவும், சுகாதாரப் பணியாளர்கள் சமூக ஊடகத் தளங்கள் மற்றும் ஏனைய தனிப்பட்ட செயற்பாடுகளில் தமது ஓய்வு நேரத்தில் ஈடுபட அனுமதிப்பதாகவும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.