உடல் ஆரோக்கியத்திற்கும் வலுவிற்கும் கருப்பு உளுந்து கருப்பட்டி கஞ்சி: எப்படி செய்வது?
பொதுவாக கருப்பு உளுந்தில் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் இரும்புச் சத்துக்கள் அதிகம் உள்ளன. மேலும் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. கருப்பு உளுந்து கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் எலும்புகள், மூட்டுகளின் வலிமை அதிகரிக்கும். கருப்பு உளுந்தை பயன்படுத்தி ஆரோக்கியமான மற்றும் சுவையான கருப்பட்டி கஞ்சி எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கருப்பு உளுந்து- 1 கப்
பச்சரிசி- 1/4 கப்
கருப்பட்டி- 3/4 கப்
துருவிய தேங்காய்- 1 கைப்பிடி
ஏலக்காய் தூள்- 1 ஸ்பூன்
முந்திரி- 10
திராட்சை- 10
நெய்- 3 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு வாணலில் கருப்பு உளுந்தை சேர்த்து மிதமான தீயில் வைத்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் அதே வாணலில் பச்சரிசி சேர்த்து மிதமான தீயில் வைத்து பொரிந்து வரும்வரை வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
இது நன்கு ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து அரைத்த உளுந்து மற்றும் அரிசியை அளந்து ஒரு பவுலில் போட்டு தண்ணீர் ஊற்றி கரைத்துக்கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தில் 1 கப் மாவிற்கு 1½ கப் தண்ணீர் என்கின்ற அளவிற்கு ஊற்றி கொதித்து வரும்பொழுது கரைத்த மாவை சேர்த்து கைவிடாமல் கிளறவும்.
நன்கு கெட்டியாகி வந்ததும் இதில் தூசி இல்லாத கருப்பட்டி அல்லது நாட்டுச்சர்க்கரை சேர்த்து கிளறவும். இதைத்தொடர்ந்து இதில் ஏலக்காய் தூள், தேங்காய் சேர்த்து கிளறவும்.
இறுதியாக நெய்யில் தாளித்த முந்திரி, திராட்சை சேர்த்து கிளறி இறக்கினால் ஆரோக்கியமான கருப்பு உளுந்து கருப்பட்டி கஞ்சி தயார்.