லண்டன்

இந்தியாவின் சந்திரயான் வெற்றியால் எரிச்சலடைந்த பிரித்தானிய ஊடகவியலாளர்: பதிலடி கொடுக்கும் இந்தியர்கள்

நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தை தரையிறக்கிய முதல் நாடு என்ற சாதனையை படைத்துள்ளது இந்தியா. சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றதற்காக, அமெரிக்கா உட்பட உலக நாடுகள் பல இந்தியாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துவரும் நிலையில், இந்தியா பெற்ற வெற்றியை சகிக்கமுடியாமல் வயிற்றெரிச்சலைக் கொட்டியுள்ளார்கள் ஊடகவியலாளர்கள் சிலர். உண்மையில், ஏற்கனவே அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் நிலவுக்கு விண்கலங்களை அனுப்பியுள்ளன. ஆனால், இந்தியா, முதன்முறையாக இதுவரை யாரும் தொடாத நிலவின் தென் துருவத்தில் கால் பதித்துள்ளது என்பதுதான் அதன் பெருமைக்குக் காரணம்.

உலக நாடுகள் பல இந்தியாவின் வெற்றிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வரும் நிலையில், பிரித்தானிய ஊடகவியலாளர்கள் சிலர் இந்தியாவின் வெற்றியை சகிக்க முடியாமல் தங்கள் வயிற்றெரிச்சலை நேரலையிலேயே கொட்டியுள்ளார்கள். பிரபல பிரித்தானிய ஊடகமான பிபிசியின் ஊடகவியலாளர் ஒருவர், சரியான உள்கட்டமைப்பு இல்லாத, கடுமையான வறுமையில் வாடும், 700 மில்லியன் குடிமக்களுக்கு கழிப்பறை கூட இல்லாத ஒரு நாடாகிய இந்தியாவுக்கு, இவ்வளவு பெரிய செலவில் விண்வெளித்திட்டம் எல்லாம் தேவையா என்று கேட்டுள்ளார். அதேபோல, பிரித்தானிய ஊடகமான GB News என்னும் ஊடக செய்தியாளரான Patrick Christys என்பவரும், இப்படி விண்வெளித்திட்டங்களில் பங்கேற்கும் நாடுகளுக்கெல்லாம் பிரித்தானியா நிதி உதவி செய்யக்கூடாது. 2016க்கும் 2021க்கும் இடையில் பிரித்தானியா இந்தியாவுக்குக் கொடுத்த 2.3 பில்லியன் பவுண்டுகளை இந்தியா திருப்பிக் கொடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

இப்படி இந்தியா மீது வயிற்றெரிச்சலைக் காட்டும் பிரித்தானியா ஊடகவியலாளர்களை இந்தியர்கள் இணையத்தில் கிழித்துத் தொங்கவிட்டுவருகிறார்கள். பிபிசி ஊடகவியலாளரின் கருத்துக்கு பதிலளித்துள்ள மஹிந்த்ரா குழும தலைவரான ஆனந்த் மஹிந்த்ரா, நீங்கள் இந்தியாவை ஆளும்போது எங்கள் நாட்டின் சொத்துக்களை நீங்கள் சுருட்டிச் சென்றதுதான் எங்கள் நாட்டின் வறுமைக்கே காரணம். நீங்கள் எங்கள் கோஹினூர் வைரத்தை வேண்டுமானால் திருட முடிந்திருக்கலாம், ஆனால், எங்கள் பெருமையையும், எங்கள் திறமையின் மீதான நம்பிக்கையையும் உங்களால் திருட முடியாது என்று கூறியுள்ளார். அதேபோல, இணயவாசிகள் சிலர், நீங்கள் இந்தியாவிலிருந்து கொள்ளையடித்துச் சென்ற 44 ட்ரில்லியன் டொலர்களிலிருந்து இந்த 3 பில்லியன் பவுண்டுகளை கழித்துக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்கள். வேறு சிலரோ, எங்கள் கோஹினூர் வைரத்தை திருப்பிக் கொடுங்கள் என்று கூற, ஆளாளுக்கு பிரித்தானிய ஊடகவியலாளர்களை கிழித்துத் தொங்கவிட்டு வருகிறார்கள்.

Back to top button