இலங்கை

இலங்கையில் வணிக வட்டி வீதங்கள் கணிசமாக குறையலாம் : ஐஎம்எப் இடமிருந்து கிடைத்த சாதகமான செய்தி

முதலாவது, இரண்டாவது தவணையைப் பெறுவதன் மூலம் நாம் சரியான பாதையில் செல்கிறோம் என்ற செய்தியை சர்வதேச நாணய நிதியம் உலகுக்கு அனுப்புகிறது. பொருளாதாரத்தை வலுப்படுத்த பெரும் உதவியாக உள்ளது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கணிசமாக குறையும் வட்டி வீதங்கள்
தொடர்ந்தும் தெரிவிக்கையில், சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட நிதி கிடைத்தவுடன் உலக வங்கியும், ஆசிய அபிவிருத்தி வங்கியும் தங்கள் பணத்தைக் கொடுக்கத் தொடங்கும். பின்னர் திறைசேரியில் வரவு செலவுத் திட்டத்திற்கு ஒரு குறிப்பிட்ட தொகையைப் பயன்படுத்தலாம்.

இது சாத்தியமானால், அதிக வட்டிக்கு பத்திரங்களை வாங்குவதற்குப் பதிலாக, குறைந்த விலையில் கடன்களைப் பெற முடியும். அப்போது வணிக வட்டி வீதங்கள் கணிசமாகக் குறையும் என்று எதிர்பார்க்கிறோம். வட்டி வீதத்தை 10_-11வீதமாகக் குறைக்க முடிந்தால், கடன் பெறவும், நிதி வசதிகள் மூலம் தொழில் தொடங்கவும் வாய்ப்பு வழங்கப்படும்.

பொருளாதாரத்தை வலுப்படுத்த பெரும் உதவி
இரண்டாவது கடன் தவணை பொருளாதாரத்தை வலுப்படுத்த பெரும் உதவியாக உள்ளது. முதல் கடன் தவணை தொடக்கம் இரண்டாவது கடன் தவணை வரை மிகவும் கடினமான பயணத்தை கடந்தே வந்துள்ளோம். இப்படி ஒரு கடினமான பயணத்தை கடந்து வந்த வெனிசுலா, ஆர்ஜென்டினா, ஜிம்பாப்வே, லெபனான் போன்ற நாடுகள் சுமார் 10-_15 வருடங்களாக சரிவான நிலையிலேயே காணப்படுகின்றன. அவர்களால் இன்னும் வெளியே வர முடியவில்லை. அந்தப் பார்வையில், நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். கடினமான பயணத்தை சரியாக நிர்வகித்து அந்த வழியில் பயணித்து வந்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

Back to top button