அமைச்சரவை இ.போ.சவிற்கு டயர்களை வழங்குவதற்கான கேள்விப்பத்திரத்துக்கு அங்கீகாரம்
இலங்கை போக்குவரத்து சபைக்கு டயர்களை வழங்குவதற்கு 566 மில்லியன் ரூபாய்களுக்கான கேள்விப்பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்தநிலையில் சர்ச்சைக்குரிய வர்த்தகரான நந்தன லொக்குவிதான என்பவருக்கு சொந்தமான Ferentino Tyre Corporation (Pvt) Ltd நிறுவனத்துக்கு ஏலம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் 2017ஆம் ஆண்டில், ஹொரணையில் 100 ஏக்கர் நிலத்தில் தொழிற்சாலை ஒன்றை அமைப்பதற்காக பாரிய குத்தகை தள்ளுபடி மற்றும் பெரும் வரிச்சலுகைகளுடன் நல்லாட்சி அரசாங்கத்தில் உடன்படிக்கையை பெற்றிருந்தது.
நிராகரிப்பு
இந்தநிலையில் தற்போது டயர்களுக்கான ஏலத்தில் ஃபெரெண்டினோவின், போட்டியாளரான M/s CEAT Kelani International Tyres (Pvt) Ltd அதன் விலைப் பொதி சுமார் 15 வீதம் அதிகமாக இருந்ததாலும், இலங்கை போக்குவரத்து சபையின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய இரண்டு தொழில்நுட்பத் தேவைகளுக்கு இணங்காததாலும் நிராகரிக்கப்பட்டது. எனினும் ஏலம் ஃபெரெண்டினோவுக்கு வழங்கப்பட்டாலும் அதன் உற்பத்திகள் இலங்கை போக்குவரத்து சபையின் தேவைகளுக்கு ஏற்ப பொருந்தவில்லை என்று சபையின் தொழில்நுட்பக் குழு கண்டறிந்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.