
யுத்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ,கோட்டாபய ராஜபக்ஷ உட்பட நான்கு பெரின்மீது கனடா அரசாங்கம் தடைவிதித்துள்ளது.
மேலும் தடை விதிக்கப்பட்ட மற்றைய அதிகாரிகள் இலங்கை இராணுவப் படைப் பிரிவின் முன்னாள் அதிகாரி சுனில் ரத்நாயக்க, மற்றும் கடற்படைப் புலனாய்வு அதிகாரி லெப்டினன்ட் கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி ஆகியோராவர்.
இலங்கையில் இடம்பெற்ற ஆயுதப் போரின் போது மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பான குறித்த நால்வருக்கும் எதிராக விசேட பொருளாதார நடவடிக்கைகள் சட்டத்தின் கீழ் கனடா த் தடைகளை விதித்துள்ளதாக கனடாவின் வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி தெரிவித்துள்ளார்.
சிறப்புப் பொருளாதார நடவடிக்கைகள் சட்டத்தின்படி கனடாவில் அவர்கள் வைத்திருக்கும் சொத்துக்களும் முடக்கப்படுவதாகவும், குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவர்கள் கனடாவிற்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொறுப்புக்கூறல் தொடர்பில் கனடா மற்றும் சர்வதேச சமூகம் தொடர்ந்து அழைப்பு விடுத்துள்ள போதிலும், இலங்கை அரசாங்கம் தனது மனித உரிமைக் கடமைகளை நிலைநிறுத்துவதற்கு வரையறுக்கப்பட்ட அர்த்தமுள்ள மற்றும் உறுதியான நடவடிக்கையை எடுக்காதிருப்பதால் . இது பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியின் முன்னேற்றத்தையும் மற்றும் அமைதி , நல்லிணக்கத்திற்கான வாய்ப்புகளையும் பாதிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மொத்த மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்கள் நீதிக்கு தகுதியானவர்கள். எனவேதான், அர்த்தமுள்ள பொறுப்புக்கூறல் செயல்முறையை நிறுவுவதற்கான தனது உறுதிப்பாட்டை நிறைவேற்றுமாறு இலங்கைக்கு கனடா தொடர்ந்து அழைப்பு விடுத்துள்ளது.
இலங்கையில் பாரிய மனித உரிமை மீறல்களைச் செய்தவர்கள் தண்டனையில் இருந்து தப்பிப்பதை கனடா ஏற்றுக்கொள்ளாது என்ற தெளிவான செய்தியை இந்தத் தடைகள் வெளிகொண்டுவருகின்றன.
மேலும் அவரது கருத்தில், இலங்கையில் மக்கள் எதிர்நோக்கும் இன்னல்களைப் போக்குவதற்கான அவசர அரசியல் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களை நோக்கிய முயற்சிகளுக்கு கனடா ஆதரவளிக்கிறது. இந்த நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் இலங்கை அரசாங்கம் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியைப் பேணுவதற்கு நாங்கள் வலுவாக ஊக்குவிக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.