இலங்கை

யாழில் வடைக்குள் கரப்பான் பூச்சி – 80 ஆயிரம் அபராதம்!

யாழ்ப்பாணத்தில் வடைக்குள் கரப்பான் பூச்சி காணப்பட்டகுற்றச்சாட்டில் உணவகமொன்றிற்கு 60 ஆயிரம் ரூபாயும் , உணவகத்தின் சமையல் கூடத்திற்கு 20 ஆயிரம் ரூபாயும் நீதிமன்றினால் தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த உணவகத்தினை 42நாட்களின் பின்னர் மீள திறக்க நீதிமன்று அனுமதித்தது.

கடந்த டிசம்பர் 04ஆம் திகதி யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை சிவன் கோவிலுக்கு அருகில் உள்ள உணவகம் ஒன்றில் வாங்கிய வடையில் கரப்பான் பூச்சி காணப்பட்டதை தொடர்ந்து பொது சுகாதார பரிசோதகருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றிருந்தது.

குறித்த கடைக்கு சென்று பொது சுகாதார பரிசோதகர் விசாரணைகளை முன்னெடுத்து கடையினையும் சோதனையிட்டார்கள்.

அதன் போது கடை மற்றும் சமையல் கூடம் என்பவை பல்வேறு சுகாதார குறைப்பாடுகளுடன் காணப்பட்டது. அதனால் குறித்த கடைக்கும் அதன் சமையல் கூடத்திற்கும் எதிராக தனித்தனியே யாழ்.நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அதனை அடுத்து வழக்கு விசாரணைகள் முடிவடையும் வரையில் கடையையும் , சமையல் கூடதினையும் சீல் வைத்து மூடுமாறு நீதிமன்று உத்தரவிட்டது.

குறித்த வழக்கு இன்றைய தினம் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது , குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றத்தினை ஏற்றுக்கொண்டதை அடுத்து , உணவகத்திற்கு 60 ஆயிரம் ரூபாய் தண்டமும் , சமையல் கூடத்திற்கு 20 ஆயிரம் ரூபாய் தண்டமும் விதித்த மன்று கடையினை மீள திறக்கவும் அனுமதி வழங்கியுள்ளது.

Back to top button