இலங்கை

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஏற்ப்பட்டுள்ள பாரிய சிக்கல்!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 13 நோயாளர் காவு வண்டிகள் உள்ள போதிலும் இரண்டு வகை நோயாளர் காவு வண்டிகளே நல்ல நிலையில் உள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அத்துடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் போக்குவரத்து தேவைக்காக 20 வருடங்களுக்கு மேல் பழைமையான 3 வாகனங்கள் மாத்திரமே உள்ளதாகவும், அடிக்கடி இயந்திர கோளாறுகள் ஏற்படுவதனால் இந்த வாகனங்கள் நீண்ட காலமாக பாவனையற்று உள்ளதாகவும் பேச்சாளர் சுட்டிக்காட்டினார். இதனால், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் போக்குவரத்து நடவடிக்கைகள் தடைபட்டுள்ளது மட்டுமன்றி, அந்த வாகனங்களின் பராமரிப்புக்காகவும் பாரியளவிலான பணம் செலவிட வேண்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சுமார் 11000 ஊழியர்கள் உள்ளதாகவும், நாளொன்றுக்கு சுமார் 8000 நோயாளர்கள் சிகிச்சைக்காக வருவதாகவும் பேச்சாளர் குறிப்பிட்டார். எனினும் பொது போக்குவரத்து சேவைகள் இன்மையால் ஊழியர்கள் மற்றும் நோயாளர்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்வதாக அவர் சுட்டிக்காட்டினார். சுகாதார அமைச்சு உட்பட பல்வேறு அரச திணைக்களங்களில் அரசியல் நியமனம் பெற்றவர்களுக்கு விசேட சலுகைகளின் கீழ் சொகுசு கார்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், நாட்டுக்கு பெரும் சேவையை ஆற்றிவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் போக்குவரத்து சேவை புத்துயிர் பெற வேண்டும் எனவும் பேச்சாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Back to top button