ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இன்று (16) காலை மேற்கு மத்திய வங்கக் கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே மத்திய வங்கக் கடலில் பயணிக்கும் நெடுநாள் மீன்பிடி படகுகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் திணைக்கள்ம் மேலும் தெரிவிக்கையில்,
கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அதிகரிக்கலாம்
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பகுதியை சுற்றி அந்தமான் மற்றும் நிக்கோபாரை ஒட்டியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (15) காலை 8.30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி மேற்கு மத்திய வங்காள விரிகுடா கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளது.
இதன் காரணமாக கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணிக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கலாம். கடற்பரப்புகள் கொந்தளிப்பாகவோ அல்லது மிகவும் கொந்தளிப்பாகவோ காணப்படும் எனவும், பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் குறித்த பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என மீனவ மற்றும் கடல்சார் சமூகத்தினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்வரும் அறிவிப்புகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு கடற்றொழில் மற்றும் கடல்சார் சமூகங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.