இலங்கை

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் வெளியான தகவல்!- ஜானக வக்கும்புர

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் 25ஆம் திகதி இடம்பெறாது என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார். பிரதமருக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இடையில் இன்று இடம்பெற்ற விசேட சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கலந்துரையாடலின் போது, நிதி அமைச்சகத்துடன் கலந்தாலோசித்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கைகளுக்கு நீதி வழங்குவதாக பிரதமர் உறுதியளித்துள்ளார் என அவர் மேலும் குறிப்பிட்டார். அத்துடன், ‘தேர்தல்கள் ஆணைக்குழுவின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் பிரதமருடன் கலந்துரையாடப்பட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்த அரச ஊழியர்களுக்கு எதிர்வரும் 25ஆம் திகதி வரை ஊதியம் வழங்குவது குறித்தும், அதற்குப் பிறகும் ஊதியம் வழங்குவது போன்ற விடயங்கள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

“தேர்தல்கள் ஆணைக்குழு நிதி அமைச்சுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவுள்ளது, இதன்போது தேர்தல் நடத்தப்பட வேண்டுமா இல்லையா என்பது தொடர்பில் அவர்கள் அறிவிப்பார்கள் என இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், தற்போதைய நிலையில் எதிர்வரும் 25ஆம் திகதி தேர்தலை நடத்துவது கடினம் என அவர் சுட்டிக்காட்டினார். எவ்வாறாயினும், தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் நிதி அமைச்சு தேர்தல் குறித்த எதிர்கால நடவடிக்கைகளை எதிர்வரும் 25ஆம் திகதிக்கு முன்னர் அறிக்கை ஊடாக அறிவிக்கும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

Back to top button