இலங்கை

மின் கட்டணம் குறைப்பு: இறுதி தீர்மானம் தொடர்பில் அமைச்சர் அறிவிப்பு

மின் கட்டணத்தை குறைப்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்க உள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (20.2.2024) உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், பல்வேறு தரப்பினரிடம் மின்கட்டணம் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் ஆலோசனைகள் குறித்து எங்களுக்கு தகவல் தருமாறு கோரிக்கை விடுத்தோம். பல்வேறு தரப்பினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பொறியியல் சங்கங்கள், பொறியாளர்கள் மற்றும் மின் துறையில் வல்லுநர்கள், குறிப்பாக நமது பல்கலைக்கழகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய சுமார் 40 பேர் ஆலோசனைகளை வழங்கினர்.

அத்துடன், கடந்த 15ஆம் திகதி பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பொதுமக்களின் கருத்துக்களுக்காக திறந்து வைக்கப்பட்டதுடன் அங்கு சில கருத்துகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, இரண்டு கருத்துக்களையும் இணைத்து, கடந்த 4 ஆண்டுகளில் பராமரிப்புப் பணிகளை முடிக்க இந்த ஆண்டு சில செலவுகள் கணிக்கப்பட்டுள்ளதாக நாங்கள் அறிவுறுத்தியுள்ளோம்.

மேலும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டு அது தொடர்பில் அவர்கள் முடிவெடுப்பார்கள் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டி உள்ளார். இந்நிலையிலேயே, மின்சார கட்டணம் முன்னர் குறிப்பிட்ட தொகையை விட அதிகமாக குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

Back to top button