லண்டன்

பிரித்தானியாவில் எலான் மஸ்க் மின்சார விற்பனையில் களமிறக்கம்!

பிரித்தானியாவில் உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க் மின்சார விற்பனையை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் ட்விட்டர் ஆகிய நிறுவனங்களின் உரிமையாளரான எலான் மஸ்க் உலகின் முன்னணி பணக்காரராக திகழ்ந்து வருகிறது. பல நிறுவனங்களை நடத்தி வரும் இவர், தம்முடைய டெஸ்லா எலக்ட்ரிக் நிறுவனம் மூலம் அமெரிக்காவில் தங்களுடைய டெஸ்லா மின்சார கார்கள் மற்றும் பேட்டரிகள் வைத்து இருப்பவர்களுக்கு மின்சாரம் விநியோகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது இந்த மின்சார விநியோக வியாபாரத்தை பிரித்தானியாவிலும் தொடங்க டெஸ்லா நிறுவன தலைவரான எலான் மஸ்க் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் இதற்காக பிரித்தானிய சந்தையில் மின்சார விநியோகத்தில் ஈடுபடுவதற்காக அதிகாரி ஒருவரையும் அவர் நியமிக்க தேடி வருவதாகவும் இது தொடர்பாக வெளியான விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் மின்சார விநியோகம் செய்ய டெஸ்லா நிறுவனம் 3 ஆண்டுகளுக்கு முன்பே முயற்சியை தொடங்கிவிட்டது. இந்நிலையில் கிரேட் பிரிட்டன் எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையம் கடந்த 2020 ஜூனில் டெஸ்லா நிறுவனத்திற்கு அனுமதியும் வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு முதல் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டெஸ்லா குடியிருப்பு பகுதிகளுக்கு இந்த நிறுவனம் மின்சாரம் வழங்க தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை டெஸ்லா நிறுவனம் பிரித்தானியாவிலும் தன்னுடைய மின்சார விநியோக வியாபாரத்தில் கால்பதிக்க உள்ளது. பிரித்தானியாவில் டெஸ்லா பவர்வால் பேட்டரிகள், சூரிய ஒளித் தகடுகள் மற்றும் டெஸ்லா கார்கள் வைத்து இருக்கும் நபர்களுக்கு இந்த திட்டம் மிகவும் உதவிகரமாக இருக்கும். மின்சார விலை அதிகரிக்கும் நேரத்தில் டெஸ்லா நிறுவனத்தின் மின்சாரம் மிக குறைந்த விலையில் கிடைக்கும். மேலும் வாடிக்கையாளர்கள் தங்களிடம் உள்ள அதிகமான மின்சாரத்தை சந்தையில் தட்டுப்பாடு அல்லது விலையேற்றம் ஏற்படும் போது கிரிட் என்னும் மின்சார சேமிப்பு நிலையத்திற்கு வழங்கி இலாபமும் பெறலாம் என டெஸ்லா தரப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டெஸ்லா நிறுவனத்தின் மின்சாரமானது புதுப்பிக்கக்கூடிய மின்சார உற்பத்தி முறைப்படி தயாரிக்கப்பட்டது ஆகும்.

Back to top button