வடமாகாண ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் மீட்கப்பட்ட மந்திரிக்கப்பட்ட பொருட்கள்
இன்று (19.05.2023) வடக்கு ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் மந்திரிக்கப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஆளுநர் செயலக வட்டாரம் தகவல்கள் தெரிவிக்கின்றன. வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பி.எஸ்.எம்.சார்ள்ஸ் எதிர்வரும் வாரம் பதவியேற்க உள்ள நிலையில் வாசஸ்தலத்தினை தூய்மையாக்கும் பணி செயலக ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மாகாண ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இதற்கு முன்னர் முன்னாள் ஆளுநர் ஜீவன் தியாகராஜா தங்கியிருந்தார்.
இதனையடுத்து, ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் உள்ள அறைகளில் போத்தல்களில் அடைக்கப்பட்ட மந்திரிக்கப்பட்ட பொருட்கள் காணப்பட்டதை அவதானித்த ஊழியர்கள் குறித்த விடயம் தொடர்பில் உயர் அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளன. இது தொடர்பில் அதிகாரிகள் முன்னாள் வடக்கு மாகாண ஆளுநரிடம் குறித்த விடயம் தொடர்பில் வினவிய போது அவை மந்திரிக்கப்பட்ட பொருட்கள் எனவும் அவற்றினை நிலத்தில் கிடங்குவெட்டி புதைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்கு இந்து மத குரு ஒருவர் வரவழைக்கப்பட்டு மந்தரிக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் உரிய முறையில் அகற்றி நிலத்தில் கிடங்கு வெட்டி புதைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.