அரசாங்க ஊழியர்களின் சம்பளம் மற்றும் இறக்குமதி கட்டுப்பாடு தொடர்பில் நிதி அமைச்சின் புதிய அறிவிப்பு
இலங்கையில் இம்முறை முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்கள் மீதும் அதிக கவனம் செலுத்தப்பட்டது. பல ஆண்டுகளாக அரச சேவைக்கான சம்பளம் அதிகரிக்கப்படவில்லை. அதன்படி, மேலதிகமாக 10,000 ரூபா வழங்க அரசாங்கம் ஏற்பாடு செய்தது என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். மேலும், குறைந்த வருமானம் பெறுவோர், சிறுநீரக நோயாளிகள், அங்கவீனருக்கான கொடுப்பனவு, முதியோர் உதவித்தொகை பெறும் குழுக்கள் என அனைத்துப் பிரிவினர் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், தனிநபர் பயன்பாட்டுக்கான வாகனங்கள் தவிர, இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன எனவும் அவர் சுட்டிக்காட்டினார். அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில் நிதியமைச்சில் நேற்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அரச ஊழியர்களின் சம்பளம்
தொடர்ந்தும் தெரிவிக்கையில், இந்த ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் மூலம் பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளில் வளர்ச்சியை எட்ட முடியும். பொருளாதாரத்தில் வளர்ச்சியை ஏற்படுத்த, நெருக்கடிக்கு முன்னிருந்த பொருளாதார நிலைக்கு நாட்டைக் கொண்டு வருவது அவசியம். அதற்கான அடிப்படை கடந்த வரவு செலவுத் திட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டது. இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் பொருளாதார ஸ்திரத்தன்மையை உருவாக்க முன்மொழியப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை இதுவரை எந்தளவுக்கு எட்டப்பட்டுள்ளது என்பதை மத்திய வங்கியின் தரவுகளை அவதானிப்பதன் மூலம் உறுதிப்படுத்த முடியும். 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கும் போது, வரவு செலவுத் திட்ட ஆவணத்தை முன்வைக்கக்கூடிய சூழ்நிலையேனும் நாட்டில் இருக்கவில்லை. அந்த நேரத்தில், மிகப் பெரிய பொருளாதார சரிவுடன் அரசியல் – சமூக உறுதியற்றத் தன்மையும் நாட்டில் காணப்பட்டது. ஆனால் இதுவரை எட்டப்பட்ட பொருளாதார ஸ்திரத்தன்மை 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஆவணத்தின் பிரதிபலன் என்று கூற வேண்டும்.
மேலும், அடுத்த ஆண்டு 1.8% பொருளாதார வளர்ச்சியை அரசாங்கம் எதிர்பார்க்கிறது. ஆனால் அதை 2% அல்லது அதற்கு மேல் அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பதில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் நாட்டின் கடன் வழங்குநர்களுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களும் கவனத்தில் கொள்ளப்பட்டன.
குறிப்பாக, கடன் நிலைத்தன்மையை எவ்வளவு தூரம் அடைகிறோம் என்பது மிகவும் முக்கியம். எனவே, வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளைத் தயாரிக்கும் போது கடன் மறுசீரமைப்பு மற்றும் பல்வேறு விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
குறிப்பாக, இந்த பொருளாதார நெருக்கடியின் போது கடுமையான அழுத்தத்திற்கு உள்ளான மக்கள் குழுக்களுக்கு நாங்கள் அதிக கவனம் செலுத்தியுள்ளோம். அரச ஊழியர்கள் மீதும் அதிக கவனம் செலுத்தப்பட்டது. பல ஆண்டுகளாக அரச சேவைக்கான சம்பளம் அதிகரிக்கப்படவில்லை. அதன்படி, மேலதிகமாக 10,000 ரூபா வழங்க அரசாங்கம் ஏற்பாடு செய்தது.
மேலும், குறைந்த வருமானம் பெறுவோர், சிறுநீரக நோயாளிகள், அங்கவீனருக்கான கொடுப்பனவு, முதியோர் உதவித்தொகை பெறும் குழுக்கள் என அனைத்துப் பிரிவினர் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 03 மில்லியன் குடும்பங்கள் பயனடையவுள்ளன.
மேலும், பொருளாதார நெருக்கடியால், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் மேம்பாட்டுக்காக இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் 30 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அவர்கள் ஒற்றை இலக்க மதிப்பில் சலுகை வட்டியில் கடன் வசதிகளைப் பெறுவதற்கான முறைமையும் தயாரிக்கப்பட்டுள்ளது. இன்று, தனிநபர் பயன்பாட்டுக்கான வாகனங்கள் தவிர, இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.