இலங்கை

நாற்பது வருடங்களின் பின்னர் யாழில் இருந்து செல்லும் கொடிச்சீலை!

வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழாவை முன்னிட்டு, 4 தசாப்தங்களுக்கு பின்னர்கொடிச்சீலை உபயகரார்களுக்கான களாஞ்சி வழஙகும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளை தொடர்ந்து இன்று காலை யாழ். திருநெல்வேலி வெள்ளைப் பிள்ளையார் ஆலயத்தில் உள்ள சிவபெருமானுக்கு விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது.

இதனைத் தொடர்ந்து திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களுக்கான காளாஞ்சி எடுத்துச் செல்லப்பட்டு திருநெல்வேலி கென்னடி வீதியில் உள்ள சண்முகநாதன் – கபிலன் குடும்பத்தினரிடம் கையளிக்கப்பட்டு பெருந்திருவிழாவுக்கான பத்திரிகையும் வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், திருக்கேதீஸ்வர ஆலய பிரதம சிவாச்சாரியார் மற்றும் ஆலய திருப்பணி சபையை சேர்ந்த உறுப்பினர்கள் பங்குபற்றியிருந்தனர். திருக்கேதீஸ்வர ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் மே 24ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. அதெவேளை 1982ம் ஆண்டிற்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இருந்தே திருக்கேதீஸ்வரத்திற்கு கொடிச்சீலை வழங்கப்பட்டநிலையில் யுத்த காலத்தில் அந்த முறை கைவிடப்பட்டிருந்தது

அத்துடன், கடந்த வருடம் திருக்கேதீஸ்வரத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில் 40 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் திருக்கேதீச்சர ஆலயத்திற்கு யாழ்ப்பாணத்தில் இருந்து பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Back to top button