எதிரும் புதிரும் இணையும் உள்ளூராட்சி சபை களம்
பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார ஐக்கிய தேசியக் கட்சியும் பொதுஜன பெரமுனவும் உள்ளூராட்சி சபைகளில் இணைந்தும், புரிந்துணர்வுடனும் போட்டியிட தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (10) இரு கட்சிகளதும் முக்கியஸ்தர்கள் நடாத்திய பேச்சுக்கள் வெற்றியளித்துள்ளன.
இதுபற்றி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இதுதொடர்பில் மேலும் தெரிவித்துள்ள பாலித ரங்கே பண்டார : ஐக்கிய தேசியக் கட்சியும் பொதுஜன பெரமுனவும் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இணைந்து போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளன.
நாம் அனைத்து மாவட்டங்களிலுமுள்ள இரு கட்சிகளினதும் முக்கியஸ்தர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களை அழைத்து எந்தெந்த தேர்தல் தொகுதிகளில் எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது தொடர்பில் மற்றும் பொது சின்னத்தில் போட்டியிடும் தொகுதிகள் எவை என்பது தொடர்பில் கலந்துரையாடியுள்ளோம்.அதேவேளை போட்டியிடும் பிரதேசங்களில் வேட்பாளர்களை பகிர்ந்துகொள்வது எந்த அடிப்படையில் என்பது தொடர்பிலும் ஆராயப்பட்டு இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் அரசியல் கட்சிகள் மற்றும் 54 அமைப்புகளும் பொதுஜன பெரமுனவுடன் 13 அமைப்புகளும் கைகோர்த்து செயற்படவுள்ளதாக அனைவரும் ஒரே குழுவாக செயற்படுவதற்கும் இணக்கப்பாடு காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேற்படி பேச்சுவார்த்தையில் பொதுஜன பெரமுன சார்பில் மஹிந்தானந்த அழுத்கமகே, ரோஹித்த அபேகுணவர்த்தன, சஞ்சீவ எதிரிமான ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ருவன் விஜயவர்த்தன, வஜிர அபேவர்த்தன ஆகியோரும் கலந்துகொண்டுள்ளதாக பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
அத்துடன் இரத்தினபுரி, கண்டி, புத்தளம், அநுராதபுரம் மற்றும் குருநாகல் மாவட்டங்களிலிருந்து இரு கட்சிகளையும் சேர்ந்த பிரதிநிதிகள் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.