இலங்கை

வெளிநாட்டில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு நற்செய்தி: ரணிலிடம் கையளிக்கப்பட்ட பெருந்தொகையான பணம்

வெளிநாட்டில் பணியாற்றும் இலங்கை தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் முறைமை ஒன்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மனுஷ நாணயக்கார அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் விளக்கமளித்துள்ளார். வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் இவ்வருத்திற்காக 07 பில்லியன் ரூபாக்களை திறைசேரிக்கு வழங்கியுள்ளதோடு, அதில் 04 பில்லியன் ரூபாவிற்கான காசோலை நேற்று(29) அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் அதிபரிடம் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிதியானது, நாட்டின் பொருளாதார நெருக்கடியை கருத்திற் கொண்டு அவசியமான மருந்துப் பொருட்கள் கொள்வனவு, அரச ஊழியர்களின் சம்பள கொடுப்பனவு, உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக அதிபரிடம் கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்போது, 07 பில்லியன் ரூபாவில் 03 பில்லியன் ரூபா ஏற்கனவே அதிபரிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளதோடு அதற்கு இணையாக மஹரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கான மருந்துகளை கொள்வனவு செய்வதற்காகவும் 100 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது.

அத்தோடு, இதற்கு முன்னரான காலப்பகுதிகளில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் திறைசேரிக்கு 3382 மில்லியன்களை வழங்கியிருந்தாலும் ஒரு வருடத்தில் 07 பில்லியன் ரூபாவை வழங்கும் முதல் சந்தர்ப்பம் இதுவாக கருதப்படுகிறது. இந்நிகழ்வின் போதே அமைச்சர் மனுஷ நாணயக்கார வெளிநாட்டில் பணிபரியும் ஓய்வூதியம் வழங்கும் முறைமை தொடர்பில் அதிபருக்கு விளக்கமளித்துள்ளார்.

மேலும், வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் மூலம் கடந்த 18 மாதங்களில் 7.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டுப் பணமாகப் பெற முடிந்ததாக அமைச்சர் தெரிவித்துள்ளார். வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு ஓய்வூதிய முறையை அறிமுகப்படுத்துவதற்கும், தொழிலுக்காக வெளிநாட்டு செல்வோருக்காக விமான நிலையத்தில் தனியான பிரிவை அமைப்பதற்கும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் மனுஷ நாணயக்கார இதன்போது அதிபரிடம் குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில், வெளிநாட்டு ஊழியர்களின் பணம் இலங்கைக்கு அந்நிய செலாவணி பெறுவதற்கான முக்கியமான மூலங்களில் ஒன்றாகும் என சுட்டிக்காட்டிய அதிபர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையிலான அமைச்சின் வேலைத்திட்டத்தை பாராட்டியதுடன், புதிய வேலைவாய்ப்பு பாதுகாப்பு சட்டத்தின் ஊடாக தொழிலாளர் சட்டங்களை திருத்த எடுக்கும் நடவடிக்கைகளையும் பாராட்டியுள்ளார்.

Back to top button