சுவையான காளான் குழம்பு வெறும் 15 நிமிடத்திலேயே செய்து எப்படி?
பொதுவாக காளான்களில் கலோரிகள் மற்றும் கொழுப்பு குறைவாக உள்ளன. அதோடு கூட அவை நிறைந்த அளவு நார்ச்சத்துக்களையும் கொண்டுள்ளன. புரதங்கள், வைட்டமின் C, B மற்றும் D, தாமிரம், பொட்டாசியம், பாஸ்பரஸ், செலினியம், பைட்டோ கெமிக்கல்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் போன்ற பிற ஊட்டச்சத்துக்களும் காளான்களில் நிரம்பியுள்ளன. அத்தகைய காளானில் குழம்பு வைப்பது எப்படி வைப்பது என்று தெரிந்துக்கொள்ள இந்த பதிவை தொடர்ந்து படிக்கவும்.
தேவையான பொருட்கள்
காளான் – 300 கிராம்
வெங்காயம் – 2
தக்காளி – 2
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
கொத்துமல்லி விதை(தனியா) – 1 ஸ்பூன்
சீரகம் – 3/4 ஸ்பூன்
சோம்பு – 1/2 ஸ்பூன்
பட்டை- 2 துண்டு
கிராம்பு – 2
ஏலக்காய் – 2
காய்ந்த மிளகாய் – 5
தேங்காய் – கால் மூடி
எண்ணெய்
கறிவேப்பிலை
கொத்துமல்லி இலை
உப்பு
செய்முறை
முதலில் ஒரு வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி தனியா, சீரகம், பட்டை, கிராம்பு, சோம்பு, ஏலக்காய் போட்டு பொரிந்ததும் வெங்காயம், காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும். அடுத்து அதில் தக்காளி சேர்த்து வதக்கவும். பின் தேங்காயும் சேர்த்து வதக்கி எடுக்க வேண்டும். வதக்கி எடுத்தவற்றை ஆறியதும் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். காளானை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு போட்டு தாளித்த பின் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். அதில் அரைத்த மசாலா, மஞ்சள்தூள், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். குழம்பு நன்றாக கொதி வந்ததும், காளான் துண்டுகளை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து ஒரு சில நிமிடங்களில் எடுத்தால் சுவையான காளான் குழம்பு தயார்.