கனடா

கனடாவிலிருந்து தாய்நாடு திரும்ப ஆர்வம் காட்டிவரும் புலம்பெயர்ந்தோர்: நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற்றும் எடுக்கும் முடிவு

கனடாவில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துவருவதாகவும், பலரும் மீண்டும் தங்கள் தாய்நாட்டுக்கோ அல்லது வேறொரு வெளிநாட்டுக்கோ செல்லத் திட்டமிட்டு வருவதாகவும் தொடர்ந்து செய்திகள் வெளியாகிவருகின்றன.

தாய்நாடு திரும்ப ஆர்வம் காட்டிவரும் புலம்பெயர்ந்தோர்
பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் புலம்பெயர விரும்பும் நாடு என பெயர் பெற்ற நாடு கனடா. ஆனால், இப்போது பல்வேறு காரணங்களால் பலரும் கனடாவிலிருந்து தங்கள் தாய்நாட்டுக்கு திரும்பி வருகிறார்கள்.

இந்தியாவைப் பொருத்தவரை, ஒரு காலத்தில், கனடாவுக்குச் செல்வதற்காக புலம்பெயர்தல் ஏஜண்டுகளை அணுகிவந்த மக்கள், தற்போது கனடாவிலிருந்து இந்தியா திரும்புவதற்காக புலம்பெயர்தல் ஏஜண்டுகளை அணுகிவருகிறார்கள்.

அதற்கு ஆதாரமாக கரண் (Karan Aulak) என்பவரைக் காட்டலாம். 15 ஆண்டுகளாக கனடாவில் வாழ்ந்துவந்த கரண் தற்போது இந்தியாவுக்குத் திரும்பிவிட்டார். கனடாவிலிருந்து இந்தியா திரும்புவது தொடர்பில் கனடாவிலிருந்து தினமும் தன்னை இரண்டு மூன்று பேராவது அழைக்க, அதற்காக அவர் இணையம் வழி ஆலோசனை மையம் ஒன்றையே துவக்கிவிட்டார். Back to Motherland பஞ்சாப் என்னும் அந்த இணையதளம் மூலமாக, தற்போது அவர் கனடாவிலிருந்து இந்தியா திரும்ப விரும்புபவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கிவருகிறார்.

புகார்களுக்கு கனடா பதிலளிக்கும் விதம்
கல்வி கற்பதற்காக ரொரன்றோவுக்கு கனவுகளுடன் சென்றவர் ப்ரகாஷ். அவரது பெற்றோர் தங்கள் நிலத்தை அடகுவைத்து அதிலிருந்து கிடைத்த பணத்தில்தான் தங்கள் மகனை கனடாவுக்கு அனுப்பிவைத்தார்கள். கனேடிய குடியுரிமை பெறுவது அவரது நோக்கம் என்பதை சொல்லவும்வேண்டுமா என்ன?

ஆனால், கனடாவுக்குச் சென்று ஓராண்டுக்குள்ளாகவே அவர் இந்தியா திரும்பிவிட்டார். இந்தியாவில் அவர் தற்போது பிசினஸ் ஒன்றைத் துவக்கியுள்ளார். கனடாவில் வாடகை முதல் மளிகை வரை விலைவாசி மிக அதிகமாக உள்ளது. ஒரு வாரத்துக்கு, 40 முதல் 50 மணி நேரம் வேலை செய்தால்தான் கனடாவில் சமாளிக்க முடியும் என்ற நிலை இருந்ததால், தான் இந்தியாவுக்கே திரும்பிவிட்டதாகக் கூறும் ப்ரகாஷ், பணவீக்கம் காரணமாக பல மாணவர்கள் தங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பிவருவதாக தெரிவிக்கிறார்.

கனடாவுக்குக் கல்வி கற்க வந்த மாணவர்கள், தங்களுக்கு தங்குவதற்கு சரியான வீட்டு வசதி இல்லை என்று கூறி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டார்கள். வீட்டுப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, கனடாவோ, நீங்கள் எங்கள் நாட்டுக்கு கல்வி கற்க வந்தால்தானே பிரச்சினை, வராதீர்கள் என்று கூறுவதுபோல, கனடாவுக்கு கல்வி கற்க வரும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு கட்டுப்பாடு விதித்துவிட்டது.

அத்துடன், கனடாவுக்கு கல்வி கற்க வரும் மாணவர்கள், தங்கள் செலவுக்காக, முன் நிர்ணயிக்கப்பட்டிருந்ததை விட சுமார் இரண்டு மடங்கு பணத்துடன் கனடாவுக்கு வரவேண்டும் என்றும் கூறிவிட்டது.

கனடா, தன் நாட்டு மக்கள் தேவைகளுக்காக ஒரே நேரத்தில் பல வீடுகளைக் கட்டுவதை நிறுத்தி 30 ஆண்டுகள் ஆகிறது, இப்போது மக்கள்தொகை பெருகிவிட்டதால் அதன் பலனை அனுபவிக்கிறோம் என்கிறார், Institute of Canadian Citizenship என்னும் அமைப்பின் முதன்மை செயல் அலுவலரான டேனியல் (Dniel Bernhard) என்னும் கனேடியர்.

ஆக, கனேடிய குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதுடன், கனடாவில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற்றவர்கள் கூட தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்பிவருவது, அவர்களுக்கு வருத்தம் அளிக்கும் விடயமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அதே நேரத்தில், அதனால் கனடாவின் பொருளாதாரத்துக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதையும் யாரும் மறுக்கமுடியாது!

Back to top button