இந்தியா – இலங்கை படகு சேவை விரைவில் ஆரம்பம்!
விரைவில் நாகப்பட்டினம் – யாழ்ப்பாணம் காங்கேசன்துறை இடையே பயணிகள் படகு சேவைகள் தொடங்கப்பட உள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா உறுதிப்படுத்தியுள்ளார். பெப்ரவரி 2024 இறுதிக்குள் இந்த சேவை செயற்படும் எனவும் உயர் ஸ்தானிகர் நம்பிக்கை தெரிவித்தார். வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமன்னார்- இராமேஸ்வரம் படகு இணைப்பு தொடர்பிலும் , இந்த ஆண்டு இறுதிக்குள் தீர்வு கிடைக்கும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
எனினும், சுமூகமான எல்லைக் கடப்புகளை உறுதிப்படுத்த ஜெட்டி பழுது, சுங்க மற்றும் குடியேற்ற வசதிகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டின் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார். இந்தியா-இலங்கை கூட்டாண்மையின் மூலக்கல்லாக இணைப்பின் முக்கியத்துவத்தையும், இரு நாடுகளுக்கும் பொருளாதார செழுமையை உந்துவதில் அதன் பங்கையும் அவர் வலியுறுத்தினார். அதேசமயம் இலங்கையின் பொருளாதார நன்மைகளுக்கு அப்பால், சுற்றுலா, ஹோட்டல் மேம்பாடு மற்றும் புதிய தொழில்துறைகளை மேம்படுத்தும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.