வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிப்பு குறித்து வெளியான தகவல்
நேற்றைய தினம் (02.10.2023) காலியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சிறு மற்றும் நடுத்தர அளவிலான வெதுப்பக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கமல் பெரேரா, மீண்டும் மின்கட்டணம் அதிகரித்தால் வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலையை அதிகரிக்க நேரிடும் என தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து ஆராயப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், இந்த மாதம் முதல் மின் கட்டணத்தை திருத்தியமைக்குமாறு இலங்கை மின்சார சபை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்திருந்தது. ஏற்கனவே எரிபொருள் விலையேற்றத்தினால் எமது தொழிற்துறைக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறான சூழலில், மீண்டும் மின்கட்டணம் உயர்த்தப்படுமானால் வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலைகளை அதிகரிக்க வேண்டியேற்படும் என கூறியுள்ளார்.