ஜூன் மாதம் முதல் பிரான்சில் நடைமுறைக்கு வரும் மாற்றங்கள் தொடர்பில் வெளியான தகவல்!
எதிர்வரும் ஜூன் மாதம் 01 ஆம் திகதி முதல் பிரான்சில் ஆறு முக்கிய மாற்றங்கள் நடைமுறைக்கு வருகின்றது
1. காப்பீட்டு ஒப்பந்தங்களை ரத்து செய்வது எளிதாக்கப்பட உள்ளது.
ஜூன் மாதம் 1ஆம் திகதி முதல், காப்பீட்டு ஒப்பந்தங்களை மூன்றே கிளிக்குகள் மூலம் ரத்து செய்யலாம் என்கிறார் பிரான்ஸ் பொருளாதாரத்துறை அமைச்சரான Bruno Le Maire. அதற்கான விதியை மதிக்காத நிறுவனங்களுக்கு 75,000 யூரோக்களும், தனி நபர்களுக்கு 15,000 யூரோக்களும் அபராதம் விதிக்கப்படக்கூடும்.
2. இனி எரிவாயு வழங்கும் நிறுவனங்களையும் நுகர்வோர் மாற்றிக்கொள்ளலாம்
ஜூன் மாதம் 1ஆம் திகதி முதல், நுகர்வோர் எரிவாயு வழங்கும் நிறுவனங்களை மாற்றிக்கொள்ள வழிவகை செய்யப்பட உள்ளது.
3. நிதி நிறுவன மோசடிகளை தவிர்க்க நடவடிக்கை
ஜூன் மாதம் 1ஆம் திகதி முதல், நிதி நிறுவன மோசடிகளை தவிர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அதாவது, இனி நிதி நிறுவனப் பணியாளர்கள், தங்கள் தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, முகவரி முதலான தங்களைக் குறித்த விவரங்களை அதற்கான அமைப்பான Organisme pour le registre des intermédiaires en assurance (Orias)இல் பதிவு செய்தாகவேண்டும், அவற்றை தங்கள் இணையதளத்திலும் அவர்கள் வெளியிடவேண்டும். அவர்கள் மக்களை எளிதாக ஏமாற்றிவிட்டு ஓடிவிடமுடியாது.
4. சொத்துக்கள் குறித்த விவரங்களை வெளியிட கடைசி நாள்
பிரான்சில் சொத்துக்கள் வைத்திருப்போர் அவற்றைக் குறித்த விவரங்களை ஜூன் 30ஆம் திகதிக்குள் அரசுக்கு தெரியப்படுத்தியாகவேண்டும்.
5. வரிகளை மாதாந்திர தவணைகளில் செலுத்தும் திட்டத்தில் இணைய கடைசி நாள்
மக்கள் தங்கள் வரிகளை மொத்தமாக கட்டாமல், மாதாந்திர தவணைகளில் செலுத்துவதற்கான ஒரு திட்டம் பிரான்சில் உள்ளது. அந்தத் திட்டத்தில் இணைய கடைசி நாள் ஜூன் 30ஆம் திகதி ஆகும்.
6. வாடகை தொடர்பில் ஒரு மாற்றம்
பிரான்சில், வீட்டு உரிமையாளர்கள் ஆண்டொன்றிற்கு 3.5 சதவிகிதம் அளவுக்கு மட்டுமே வாடகையை உயர்த்தலாம் என்னும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. அந்த கட்டுப்பாடு ஜூன் 30உடன் முடிவடைய உள்ளது. ஆனாலும், அதை 2024ஆம் ஆண்டின் முதல் காலாண்டு வரை நீட்டிப்பதற்காக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.