இலங்கையில் 3 மணித்தியால மின்வெட்டு குறித்து வெளியான தகவல்!
தென் மாகாணத்தில் உடவலவ நீர்த்தேக்கத்திற்கு சமனல வாவியிலிருந்து நீர் திறந்துவிடப்பட்டால் ஒரு மணித்தியாலம் முதல் மூன்று மணித்தியாலங்கள் வரையில் மின்சாரம் துண்டிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. சமனல வாவியிலிருந்து உடவலவ நீர்த்தேக்கத்திற்கு பத்து நாட்களுக்குத் தேவையான நீரை பெற்றுக் கொள்வது தொடர்பில் விவசாய அமைச்சு மற்றும் மின்சக்தி அமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இது தெரியவந்துள்ளது. எனவே இவ்வாறு நீர் திறந்துவிடப்படுமாக இருந்தால் தற்போதுள்ள நீர் மட்டம் மேலும் குறைவடைவதன் காரணமாக தென் மாகாணத்தில் ஒரு மணித்தியாலம் முதல் 3 மணி நேரம் வரை மின்சாரம் துண்டிக்கப்படும் என இலங்கை மின்சார சபை அதிகாரிகள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன் சமனல வாவி மற்றும் உடவலவ நீர்த்தேக்கம் என்பவற்றில் போதிய நீர் கொள்ளளவு இன்மையால் அடுத்து வரும் காலப்பகுதியில் விவசாய நடவடிக்கைகள் மற்றும் மின்சார உற்பத்தி பாதிக்கப்படலாம் எனவும் இதன்போது கூறப்பட்டுள்ளது. இதனால் அடுத்த வாரத்தில் மட்டும் மொத்தமாக 30 ஆயிரம் கோடி ரூபா இழப்பு ஏற்படக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கடந்த காலங்களில் இந்த நீர்த்தேக்கமானது எதிர்பார்க்கப்பட்டதில் 50% நீர் கொள்ளளவை மாத்திரமே பெற்றிருந்ததாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.