2023 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்
2023 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை இன்னும் இரண்டு வாரங்களில் வெளியிட உள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அத்துடன் உயர்தரப் பரீட்சை திட்டமிட்ட படி நடைபெறும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே கல்வி அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், உயர்தரப் பரீட்சை அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளதுடன் மாணவர்கள் தயாராக உள்ளனர். எனவே, உயர்தரப் பரீட்சை திட்டமிட்ட தினத்தில் நடைபெறும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். உயர்தரப் பரீட்சை மூன்று மாதங்கள் தாமதமடைந்துள்ளதால் 2024 சாதாரண தரப் பரீட்சை மே, ஜூன் மாதங்களில் நடைபெறவுள்ளது. எவ்வாறாயினும், பாடத்திட்டங்கள் யாவும் அடுத்த ஆண்டில் நிறைவு செய்யப்படுவதோடு பரீட்சைகள் நடைபெறும் காலங்கள் கொஞ்சம் கொஞ்சமாக முன்னோக்கி கொண்டுவரப்படும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.