இலங்கை

உணவுப் பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் வெளிவந்த தகவல்

அடுத்த வருடத்தில் உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்க திட்டமிட்டுள்ளோம் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக அமையத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் தெரிவிக்கையில், அரச வருமானத்தை அதிகரிப்பதற்காக வரிகளை அதிகரிக்க வேண்டியேற்பட்டது. அந்த அடிப்படையில் 25 சதமாகக் காணப்பட்ட சீனிக்கான இறக்குமதி வரி 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரும் அசௌகரியத்தை எதிர்கொண்டிருப்பார்கள் என்பதை ஏற்றுக் கொள்கின்றோம். எனவே நுகர்வோரைப் பாதுகாப்பதற்காக கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிப்பதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டது. அதற்கமைய அதிகபட்ச சில்லறை விலை 275 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டது.

இந்நிலையில் வரி அதிகரிப்பதற்கு முன்னர் காணப்பட்ட சீனி தொகையை சில மாதங்களுக்கு 275 ரூபாவுக்கு பெற்றுக் கொள்ள முடியும். எமக்கு வரி வருமானமும் அவசியம். நுகர்வோரின் பாதுகாப்பும் அவசியமாகும். 2024இல் உணவு பாதுகாப்பு தொடர்பில் முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளோம். அத்தோடு வரவு – செலவு திட்டத்தின் ஊடாக உணவு பணவீக்கத்தை குறைக்கவுள்ள அதே வேளை, அடுத்த வருடத்தில் உணவு பொருட்களின் விலைகளைக் குறைக்கவும் திட்டமிட்டுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

Back to top button