வெறும் அரிசி மட்டும் போதும்!- பஞ்சு போன்ற மிருதுவான ஆப்பம் செய்யலாம்
பலருக்கும் பெரும்பாலும் இட்லி, தோசை சாப்பிட்டு போரடித்து இருக்கும், மிக வித்தியாசமாக என்ன செய்யலாம் என நினைப்பார்கள்.
இருப்பினும் மிக எளிதாக தயாராகும் ஆப்ப மாவை பக்குவமாக அரைத்து வைத்தால் சுவையான பஞ்சு போன்ற ஆப்பத்தை சாப்பிடலாம். வெஜ் குருமா, ஆட்டுக்கால் பாயா என பலவகையான கிரேவிகளுடன் ஆப்பத்தை ருசித்தால் அதன் சுவையே அலாதியானது தான்.
தேவையான பொருட்கள்
பச்சரிசி- 1 கப்
துருவிய தேங்காய்- அரைகப்
தேங்காய் தண்ணீர்- தேவையான அளவு
வடித்த சாதம்- கால் கப்
செய்முறை
முதலில் பச்சரிசியை நன்றாக கழுவி விட்டு சுமார் 4 மணிநேரம் ஊறவைத்துக் கொள்ளவும், அரிசி நன்றாக ஊறியதும் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
சிறிது கொரகொரப்பாக இருக்கும் போது கால் கப் மட்டும் அரைத்த மாவை எடுத்துக் கொள்ளவும், இதனுடன் ஒரு கப் அளவு தண்ணீர் சேர்த்து கரைத்து எடுக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து இந்த கலவையை சேர்த்துக் கொண்டு அடுப்பில் வைத்து கிளறிக்கொண்டே இருக்கவும், நன்றாக பேஸ்ட் மாதிரி வந்துவிடும்.
மீதமுள்ள அரைத்த அரிசி மாவுடன் அரை கப் துருவின தேங்காய், கால் கப் சாதம், பேஸ்ட் சேர்த்து தேவையான அளவு தேங்காய் தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
தோசை மாவு பதத்துக்கு ரொம்பவும் தண்ணீராக இல்லாமல் இருக்க வேண்டும். இதை சுமார் 8 மணிநேரம் புளிக்கவைக்கவும்.
கடைசியாக தேவையான அளவு உப்பு சேர்த்து ஆப்ப சட்டியில் சுட்டு எடுத்தால் சுவையான பஞ்சு போன்ற ஆப்பம் தயாராகிவிடும்!