இலங்கை

வெலிக்கடை சிறைச்சாலையில் கெஹெலிய விடுத்துள்ள கோரிக்கை

தனது வீட்டில் இருந்து கொண்டுவரும் மருந்துகளை பயன்படுத்த அனுமதிக்குமாறு அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல வெலிக்கடை சிறைச்சாலையில் கோரிக்கை விடுத்துள்ளார்.

சிறிது காலத்துக்கு முன்னர் சுகாதார அமைச்சராக கடமையாற்றிய தற்போதைய சுற்றாடல் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, சர்ச்சைக்குரிய தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் மருந்து மோசடி தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கடந்த 02 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.

கடந்த 3ஆம் திகதி மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய பின்னர் வழங்கப்பட்ட உத்தரவின் பிரகாரம், அவர் எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தற்போது அவர் வெலிக்கடை சிறைச்சாலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சிறைச்சாலை மருத்துவமனையில் வழங்கப்படும் மருந்துக்குப் பதிலாக வீட்டில் இருந்து கொண்டு வரப்படும் மருந்துகளைப் பயன்படுத்த தனக்கு அனுமதி வழங்குமாறு அவர் சிறைச்சாலை மருத்துவமனை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

எனினும் சிறைச்சாலை மருத்துவமனை மருத்துவர்களின் சிபாரிசுக்கு அமையவே அமைச்சரின் கோரிக்கை தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என்று வெலிக்கடை சிறைச்சாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதே ​நேரம் அமைச்சரின் கோரிக்கை தொடர்பில் சிறைச்சாலை நிர்வாகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

Back to top button