ஆன்மிகம்

இந்த 6 பொருட்களை வைத்து சிவபெருமானை சனிப்பிரதோஷமான இன்றைய தினம் வழிபட வேண்டுமாம்!

நாம் சனிப்பிரதோஷத்தன்று நந்தி தேவரையும், சிவ பெருமானையும் வழிபட்டால் சனி பகவானால் ஏற்படும் அனைத்து தீமைகளும் விலகி அனைத்து விதமான தோஷங்களும் விலகும் என்று கூறப்படுகிறது. சனிப்பிரதோஷத்தன்று சிவாலயம் சென்றால் 5 வருடங்கள் சிவாலயங்கள் சென்ற பலனை பெற முடியும் என்று கூறப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்தால் ஏழு பிறவிகளில் செய்த பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

பிரதோஷ காலம் சிவ பெருமானை வழிபடுவதற்கு மிகவும் உகந்த காலம் பிரதோஷ காலமாகும். சிவனுக்குரிய அஷ்ட விரதங்களில் மிக முக்கியமானது பிரதோஷ விரதம் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஒவ்வொரு கிழமையிலும் வரும் பிரதோஷத்திற்கு ஒரு தனிச்சிறப்பு, தனிப்பலன் உண்டு. இவற்றில் சிவனுக்குரிய திங்கட்கிழமையில் வரும் சோமவார பிரதோஷமும், சனிக்கிழமையில் வரும் சனிப் பிரதோஷமும் அதீத விசேஷமானது. சிவ பெருமான், சனி பகவானின் குரு ஆவார். சிவனின் வாயாலேயே ஈஸ்வர பட்டம் பெற்றவர் சனீஸ்வரன். அவருக்குரிய சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் சனி மகாபிரதோஷம் என போற்றப்படுகிறது. 12 சாதாரண பிரதோஷங்களில் விரதம் இருந்த பலனை ஒரு சனிப்பிரதோஷ நாளில் விரதம் இருந்தால் பெற்று விடலாம். 12 ஆண்டுகள் பிரதோஷ விரதம் இருப்பவர்களின் அனைத்து பாவங்களும் நீங்கி அவர்களுக்கு சிவலோக பதவி கிடைக்கும் என்பது ஐதீகம்.

திருநீற்று தத்துவம் சனிப்பிரதோஷ நாளில் சிவ பெருமானுக்கு மிகவும் பிரியமான 6 பொருட்களை அவருக்கு படைத்து வழிபடுவதால் பாவங்கள் அனைத்தும் நீங்கும். சிவ சின்னங்களில் மிக முக்கியமானது திருநீறு. இந்த திருநீறு சாம்பலில் இருந்து தயாரிக்கப்படுவது. அழிவில்லாத என்பது சாம்பல். எந்த ஒரு பொருளை எரித்தாலும் சாம்பலாகும். ஆனால் சாம்பலை எரிக்க முடியாது. தனது நிலையில் மாற்றமின்றி இருப்பது சாம்பல். இந்த உலக வாழ்க்கை நிரந்தரமற்றது. வெள்ளை மனத்துடன் இறைவனுடன் கலப்பதே மனித வாழ்க்கையின் நோக்கம் என்பதை உணர்த்துவதே திருநீற்றின் தத்துவம்.

சிவனுக்கு பிரியமான 6 பொருட்கள் சிவனுக்கு பிரியமான நிறமும் வெள்ளை. பிரதோஷ நாளில் வெள்ளை நிற ஆடை அணிந்து பக்தர்கள் சிவனை வழிபடுகிறார்கள். அதோடு சிவனுக்கு பிரியமான வெள்ளை நிறத்தில் ஆன 6 பொருட்களை சிவனுக்கு அளிப்பது சிவ பெருமானின் அருளை பரிபூரணமாக கிடைக்க செய்யும். கங்கை நீர், பால், பாலால் செய்யப்பட்ட இனிப்பு வகைகள், தயிர், திருநீறு, சங்கு ஆகியவற்றை படைத்து வழிபடுவது சிறப்பானது. இது தவிர சிவனுக்கு பிரியமான சந்தனம், வில்வம், பாயசம் ஆகியவற்றையும் படைத்து வழிபடலாம். சனிப்பிரதோஷ நாளில் விரதமிருந்து சிவ மந்திரம் ஜபித்து சிவ சிந்தனையில் இருந்து, மாலையில் சிவன் கோவில்களில் நடக்கும் பிரதோஷ பூஜையில் கலந்து கொண்டு, சிவ தரிசனம் செய்ய வேண்டும். பிரதோஷம், சிவராத்திரி போன்ற சிவனுக்குரிய விரத நாட்களில் அபிஷேகத்திற்கு பால் வாங்கி தரலாமே தவிர, விரதம் இருப்பவர்கள் கண்டிப்பாக பால் சாப்பிடக் கூடாது. சிவனுக்கு அபிஷேகம் செய்த பாலை மட்டுமே பிரசாதமாக அருந்த வேண்டும்.

Back to top button