இத்தாலியில் 30 ஆண்டுகளாக தேடப்பட்டுவந்த மாஃபியா தலைவர் கைது!
சுமார் 30 ஆண்டுகளாக இத்தாலியில் தேடப்பட்டுவந்த மாஃபியா தலைவரான மேட்டியோ மெசினா டெனாரோ, சிசிலியில் கைது செய்யப்பட்டார்.
ஐரோப்பாவின் மிகவும் தேடப்படும் நபர்களில் ஒருவரான மேட்டியோ மெசினா டெனாரோ, சிசிலியில் மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
குறித்த கிளினிக்கில் மெசினா டெனாரோ தடுத்து வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மாஃபியா குற்றக்குழுவின் மிக முக்கியமான உறுப்பினரை தடுத்து வைப்பதில் ஆயுதப் படைகளின் பணிக்காக நன்றி தெரிவித்த இத்தாலியின் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி டெனாரே, இது அரசுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என விபரித்துள்ளார்.
மேட்டியோ மெசினா டெனாரோவின் கைது ஏன் முக்கியமானது?
மேட்டியோ மெசினா டெனாரோ, மிகவும் மோசமான சிசிலியின் கோசா நோஸ்ட்ரா மாஃபியாவின் தலைவராக இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஏப்ரல் 2006 இல் சிசிலியின் கோர்லியோனுக்கு வெளியே கைது செய்யப்பட்ட மாஃபியா தலைவரான பெர்னார்டோ ப்ரோவென்சானோவின் வாரிசுகளில் ஒருவராக டெனாரோ கருதப்படுகிறார்.
மெசினா டெனாரோ 2002இல் பல கொலைகள் தொடர்பாக விசாரணை செய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார்.
மேலும் அவர் பல கொலைகளோடு தொடர்புள்ளவராக கருதப்படுகிறார்.
1992ஆம் ஆண்டு மாஃபியா எதிர்ப்பு வழக்கறிஞர்களான ஜியோவானி ஃபால்கோன் மற்றும் பாவ்லோ போர்செலினோ கொல்லப்பட்டது, மிலன், புளோரன்ஸ் மற்றும் ரோம் ஆகிய இடங்களில் 1993 ஆம் ஆண்டு நடந்த பயங்கர குண்டுத் தாக்குதல்கள் மற்றும் அரச சாட்சியாக மாறிய ஒரு மாஃபியோவின் 11 வயது மகனைக் கடத்தல், சித்திரவதை செய்து கொன்றது ஆகியவை இதில் அடங்கும்.
இந்த கைது நடவடிக்கையில் 100க்கும் மேற்பட்ட ஆயுதப்படை வீரர்கள் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இத்தாலிய ஊடகங்களால் பரப்பப்பட்ட ஒரு காணொளியில்,, மெசினா டெனாரோவை அழைத்துச் செல்லும் போது மக்கள் தெருவில் நின்றுகொண்டு இத்தாலிய போலீஸ்துறையைப் பாராட்டுவதைக் காட்டுகிறது.