நாட்டை விட்டு வெளியேற மஹிந்தவிற்கு அனுமதி!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேற வெளிநாடு செல்வதற்கு கோட்டை நீதிவான் மன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மஹிந்தவுக்கு வெளிநாடு செல்ல அனுமதிகோரி அவரது சட்டத்தரணியினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.
அதனை கருத்திற்கொண்டு எதிர்வரும் 20ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரையான 10 நாட்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வெளிநாடு செல்வதற்கான அனுமதியை கோட்டை நீதவான் திலின கமகே வழங்கியுள்ளார்.
இரண்டு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்திடம் இருந்து பணிப்புரைகள் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.
கொழும்பு, காலி முகத்திடலில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பலர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றத்தினால் தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.