நீதிபதி ரீ.சரவணராஜா பதவி விலகல் தொடர்பில் மனோ கடும் அதிருப்தி!
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா பதவி விலகிய விவகாரம் நாட்டில் எஞ்சி இருந்த சட்ட ஆட்சிக்கு விடுக்கப்பட்ட நேரடி சவால் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அத்துடன் நீதிபதியில் விலகல் குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதற்கு உடனடியாக நாடு திரும்பி பதிலளிக்க வேண்டும் என்றும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினமும் இந்த விடயம் தொடர்பாக பதிலளிக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு நீதவான் மற்றும் மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா கடந்த 23ஆம் திகதி அவர் பதவி விலகல் கடிதத்தை நீதிச்சேவைகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனக்கு எதிரான அச்சுறுத்தல்கள் காரணமாக ஏற்பட்ட பதற்றத்தால் பதவி விலக தீர்மானித்துள்ளதாக குறித்த கடிதத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த காலங்களில் முல்லைத்தீவு பிரதேசத்தில் இடம்பெற்ற பல முக்கிய விடயங்கள் தொடர்பில் நீதவான் உத்தரவுகளை பிறப்பித்திருந்தார். இந்நிலையில் மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தன் பின்னர் வெளிநாடு சென்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.