இலங்கை

மட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபராக யாழை பிறப்பிடமாகக் கொண்ட திருமதி ஜஸ்ரினா முரளீதரன்!

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபராக , யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட திருமதி ஜஸ்ரினா யுலேக்கா முரளீதரன் இன்று (18) திங்கட்கிழமை (18) தனது கடமைகளை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பொறுப்பேற்றுள்ளார். அவருக்கான நியமனமானது கடந்த (13) திகதி கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவனேசத்துறை சந்திரகாந்தன் மற்றும் பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் கே.டி.என். ரஞ்சித் அசோக ஆகியோர் முன்னிலையில் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் பிரதமர் தினேஷ் குணவர்த்தனவினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட திருமதி ஜஸ்ரினா யுலேக்கா என்பவர் யாழ். திருக்குடும்ப கன்னியா் ஆங்கில பாடசாலையில் ஆரம்பக்கல்வி தொடக்கம் க.பொ.த உயர்தரம் வரை கற்று, தனது உயர் கல்வியை சென்னை பல்கலைக் கழகத்தில் தொடர்ந்து விஞ்ஞானமாணி (தாவரவியல்) பட்டத்தினை 1989 ஆம் ஆண்டு முதற்தரத்திலேயே சித்திபெற்ற ஒரு சிறந்த ஆளுமையுடன் திகழ்ந்ததுடன், 2013 ஆம் ஆண்டு ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாக முதுமானிப் பட்டத்தையும் பெற்றுள்ளார். கிழக்கு மாகாணத்தின் திருகோணமலையில் வசிக்கும் தேசமாண்ய திருமதி. ஜஸ்ரினா யுலேக்கா முரளிதரன், 1990 ஆம் ஆண்டில் இணைந்த வடகிழக்கு மாகாண திருகோணமலை விவசாய விரிவாக்கல் திணைக்களத்தில் பட்டதாரிப் பயிலுனராக இணைக்கப்பட்டார்.

இவர் 1991 ஆம் ஆண்டு இலங்கை நிருவாக சேவையில் முதலாவது நியமனமாக, இணைந்த வடகிழக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து 2000 ஆம் ஆண்டு இணைந்த வடகிழக்கு மாகாண கல்வி அமைச்சின் உதவிச் செயலாளராகவும், 2007 ஆம் ஆண்டிலிருந்து கிழக்கு மாகாண காணி ஆணையாளராகவும், கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் (நிருவாகம்), சமூக சேவைகள் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளராகவும், சிறுவா் நன்னடத்தை திணைக்களத்தின் மாகாண ஆணையாளராகவும், மோட்டாா் போக்குவரத்துத் திணைக்கள மாகாண ஆணையாளர் போன்ற பதவிகளை வகித்துள்ளார்.

அத்துடன் 2013 ஆம் ஆண்டு இலங்கை நிருவாக சேவையின் விசேட தரத்திற்கு உள்வாங்கப்பட்ட இவர், கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளா் (நிருவாகம்), மாகாண சபைச் செயலாளர், மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளா், கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளா், பிரதிப் பிரதம செயலாளா் (ஆளணி மற்றும் பயிற்சி) போன்ற செயலாளர் பதவிகளிலும் கடமையாற்றி வந்துள்ளார்.

Back to top button