இலங்கையில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய மர்ம ஒலி: திடீரென நீர்நிலைகள் வற்றியதால் அதிர்ச்சியில் மக்கள்
கொத்மலை – ஹதுனுவெவ பிரதேசத்தின் குடிநீர் கிடைக்கும் இடங்கள் திடீரென மர்மமான முறையில் வற்றியுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர். வெத்தலாவ பிரதேசத்தில் உள்ள மைதானத்தின் அடியில் கேட்கும் மர்மமான மற்றும் பயங்கரமான சத்தங்களால் இந்த நாட்களில் கிராம மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ள நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அந்த பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர். பழங்காலத்திலிருந்தே இந்தப் பகுதியில் அன்றாடம் உபயோகித்து வந்த நீர் நிலைகள் திடீரென வறண்டு போனது ஆச்சரியமாக உள்ளதென மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதன் காரணமாக அப்பிரதேச மக்கள் 4 நாட்கள் உறங்காமல் ஒரே இடத்தில் இரவு பகலாக கலந்துரையாடி தீர்வு காணவுள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக விரைவில் ஆய்வு மேற்கொள்ளப்படும் என நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலகொட தெரிவித்துள்ளார். நுவரெலியா மாவட்ட செயலகத்தில் கொத்மலை – ஹதுனுவெவ, வெத்தலாவ பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பில் தெரிவிக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்று கலந்து கொண்டு மாவட்ட செயலாளர் இதனை தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த மாவட்ட செயலாளர், மழைக்காலத்தில் பொது விளையாட்டு மைதானத்தின் உள்ளே இருந்து மிக பயங்கரமான சத்தம் கேட்டு அவதிப்படும் மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க குறித்த பகுதி கட்டிட ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகும். அவர்கள் சுதந்திரமாக வாழ்வதற்கான சூழலை உருவாக்குவதே தங்கள் நோக்கம் எனவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் எந்தவொரு ஆபத்தான அல்லது பேரழிவு சூழ்நிலைக்கான ஆதாரமும் பதிவு செய்யப்படவில்லை என்று விசாரணைகள் வெளிப்படுத்தியுள்ளன. எனினும் புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் விரைவில் சிறப்பு விசாரணை நடத்தும் என அவர் குறிப்பி்டுள்ளார்.