இலங்கை

தமிழீழ விடுதலைப்புலிகளிடமிருந்து பணம் பெற்ற நாம் தமிழர் கட்சி; திடீர் சோதனையில் என்ஐஏ

தமிழகத்தில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளிடம் தேசிய புலனாய்வு முகமை ( என்ஐஏ) இன்று காலை திடீ சோதனை நடவடிக்கையை முட்டுத்ததாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை, திருச்சி, கோவை, சிவகங்கை, தென்காசி உள்பட 50க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை ( என்ஐஏ) இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். தடைசெய்யப்பட்ட அமைப்பிடம் இருந்து பணம் வசூலிக்கப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் சோதனையில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது.

நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் வீடு மற்றும் அவர்களுக்கு தொடர்புடைய இடங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கோவையில் நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகிகள் வீட்டில் நடைபெற்ற என்ஐஏ சோதனை நிறைவடைந்துள்ளது. இன்று அதிகாலை தேசிய புலனாய்வு முகமை ஆய்வாளர் செந்தில் தலைமையில் கோவை வந்த அதிகாரிகள் ஆலந்துறையில் உள்ள நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி ரஞ்சித்தின் வீடு மற்றும் காளப்பட்டியில் உள்ள முருகன் வீடு என இரண்டு இடங்களில் சோதனை நடத்தினர்.

4 மணி நேரம் நடைபெற்ற இச்சோதனையில் இருவரது வங்கி கணக்குகள் மற்றும் இணையதளங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இருவரது செல்போனையும் கைப்பற்றிய என்ஐஏ அதிகாரிகள் விசாரணை முடித்து கிளம்பினர். இதே போல் திருச்சியில் உள்ள நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் வீட்டில் என்ஐஏ அதிகாரிகளின் சோதனையும் நிறைவடைந்தது. சாட்டை துரைமுருகனுக்கு என்ஐஏ அதிகாரிகள் சம்மன் வழங்கி உள்ளனர். திருச்சி சண்முக நகர் 7-வது குறுக்குத் தெருவில் வசித்து வரும் சாட்டை துரைமுருகன் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் இன்று காலையில் 2 மணி நேரம் சோதனை நடத்தினர்.

சாட்டை துரை முருகனிடமும் அவரது மனைவியிடமும் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 2022 ஆம் ஆண்டு பதியப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான வழக்கு குறித்தும் விடுதலைப்புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்கம் செய்ய நிதி சேர்ப்பதாக கூறி விசாரணை நடத்தியதாக என்ஐஏ அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. சில ஆவணங்களை என்ஐஏ அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். விசாரணைக்கு ஆஜராகும்படி சாட்டை துரைமுருகனுக்கு என்ஐஏ அதிகாரிகள் சம்மன் கொடுத்து விட்டு சென்றுள்ளனர். இதைபோல நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இடும்பவனம் கார்த்தி என்பவருக்கு இன்று காலை சென்னையில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் ஆஜராக வாட்ஸ் அப் மூலம் என்ஐஏ அதிகாரிகள் அழைப்பு விடுத்ததாகவும், இடும்பவனம் கார்த்தி வெளியூரில் இருப்பதால் 5ம் தேதி ஆஜராக இருப்பதாகவும் தமிழக தகவல்கள் கூறுகின்றன.

Back to top button