தேசிய ஒருமைப்பாடு- நல்லிணக்க ஆணைக்குழு சட்டத்தை அறிமுகப்படுத்தும் அரசாங்கம்!
இன நல்லிணக்கத்திற்கான அதன் முன்முயற்சிகளின் ஒரு பகுதியாக இலங்கையின் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தவுள்ளது. 21 இலங்கையர்களை உள்ளடக்கிய ஆணைக்குழுவை அமைப்பதே இதன் நோக்கமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 21 பேரும் பாலினம் உட்பட இலங்கையின் பன்முகத் தன்மையின் அடிப்படையில் பிரதிநிதித்துவப்படுத்துவார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
அத்துடன், அதன் அடிப்படையிலான சட்டத்தை உருவாக்குமாறு சட்ட வரைவாளரும் கேட்கப்பட்டுள்ளார். இதற்கான கருத்துருவுக்கு கடந்த வாரம் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இது தென்னாபிரிக்காவின் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அடிப்படையில் உருவாக்கம் பெறவுள்ளது.
மூன்று வருட காலத்துக்குப் பதவி வகிக்கும் வகையில், இந்த ஆணைக்குழுவின் மூன்று உறுப்பினர்களை அரசியலமைப்பு பேரவை பரிந்துரை செய்யும் அதில் ஒருவரை ஆணைக்குழுவின் தலைவராக ஜனாதிபதி நியமிப்பார்.
அத்துடன், அமர்வுகள் ஆரம்பித்த பின்னர் மூன்று மாதங்களுக்குள் குறைந்தது 3 உறுப்பினர்கள் முழு நேர அங்கத்தவர்களாக நியமிக்கப்படுவார்கள். இதனைத் தொடர்ந்து, இந்த உறுப்பினர்களில் ஒருவரை, ஆணைக்குழு, தகவல் அறியும் சட்டத்தின்கீழ் தகவல் வழங்கும் அதிகாரியாக நியமிக்கும்.
இந்தநிலையில், தேசிய ஒருமைப்பாடு, சமாதானம், சட்டத்தின் ஆட்சி, சுகவாழ்வு, சகிப்புத்தன்மையுடன் சமத்துவம் மற்றும் பன்முகத்தன்மைக்கு மதிப்பளித்தல் என்பன இந்த ஆணைக்குழுவின் முக்கிய நோக்கங்களாக இருக்கும்.
மொழி உரிமைகள் உட்படப் பொருளாதாரம், சமூகம், கலாசாரம் மற்றும் அல்லது அத்தகைய பிரச்சினைகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த பரிந்துரைகளை வழங்குதல், உள்நாட்டு மோதல்களில் ஏற்பட்ட உயிர் மற்றும் சொத்துச் சேதம் அல்லது தீங்கு விளைவிக்கும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை மற்றும் பரிந்துரைகளை இந்த ஆணைக்குழு மேற்கொள்ளும். அவை மீண்டும் நிகழாதது தொடர்பான பரிந்துரைகளை வழங்குதல் மற்றும் அதற்கான மூல காரணங்களையும் இந்த ஆணைக்குழு நிவர்த்தி செய்யும் பொறுப்பைக் கொண்டிருக்கும். அதேநேரம், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மோதல் தோற்றம் மற்றும் இலங்கையில் அரசியல் அமைதியின்மை மற்றும் உள்நாட்டுக் குழப்பங்களுக்கான காரணங்கள் தொடர்பில் பரிந்துரைகளையும் இந்த ஆணைக்குழு வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.