இலங்கை

அரச ஊழியர்களின் ஓய்வூதியம் மற்றும் சம்பள அதிகரிப்பு குறித்து நிதி அமைச்சின் அறிவிப்பு

நாட்டின் நெருக்கடியான நிலையிலும் அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக அமையத்தில் இன்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் தெரிவிக்கையில், 70% பணவீக்கம் இருந்த நாட்டில் தற்போது 5% பணவீக்க விகிதத்தை பேணவே நாம் முயற்சிக்கிறோம். இது எமது நிதி முகாமைத்துவத் திறன்களின் தனித்துவமான அம்சமாகும். இன்று நேரடி வரிகள் 30% ஆகவும் மறைமுக வரிகள் 70% ஆகவும் உள்ளது. இந்த வரி விகிதத்தை மாற்றி, நேரடி வரி விகிதத்தை 40%க்கு கொண்டு வருவதே எமது இலக்கு.

உலகில் அபிவிருத்தி அடைந்த ஒரு நாட்டின் நிலை அதுவேயாகும். வரி செலுத்தக்கூடிய பலம் வாய்ந்த 10 மில்லியன் மக்கள் உள்ளனர், ஆனால் தற்போது 05 இலட்சம் பேர் மட்டுமே வரி செலுத்துகின்றனர். வரிகோப்பு அடையாள இலக்கத்தை நடைமுறைப்படுத்த நம் தயாராக வேண்டும். தற்போது அதனைப் பதிவு செய்வதில் சிக்கல்கள் உள்ளன. மக்களுக்கு இது ஒரு புதிய அனுபவமாக உள்ளதால் தான் அந்தப் பிரச்சினைகள் தோன்றியுள்ளன. எனவே பிரதேச செயலக மட்டத்தில் அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண ஆலோசித்து வருகிறோம்.

அதனை ஒன்லைன் முறை மூலம் செயற்படுத்த வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். வரி செலுத்துபவர் ஒரு நாட்டில் ஸ்திரத்தன்மையை அடைந்த வலிமையான பிரஜை என்பது அபிவிருத்தி அடைந்த நாடுகளில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. நாட்டின் வளர்ச்சிக்கு இவ்வாறு மக்களின் மனப்பான்மையை மாற்றுவது முக்கியம். எனவே இத்திட்டம் வெற்றியடைய அனைவரின் பங்களிப்பும் எதிர்பார்க்கப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

Back to top button