கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட குழப்ப நிலையை தொடர்ந்து பயணிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு
நேற்று ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான நான்கு விமானங்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படுவதற்கு மணிக்கணக்கில் தாமதம் ஏற்பட்டதால் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகினர். சிங்கப்பூர், பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கான விமானங்கள் பல மணி நேரம் தாமதமாக சென்றன. நேற்று அதிகாலை 2.30 மணியளவில் பாகிஸ்தானின் லாகூர் நோக்கிப் புறப்படவிருந்த UL 153 என்ற விமானம் தாமதமானதால், இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மீண்டும் வீட்டிற்கு செல்ல நேரிட்டது.
இந்நிலையில், இந்தியாவின் சென்னை மற்றும் பங்களாதேஷ் டாக்கா செல்லும் விமானங்கள் தாமதமாக வருவதாக அறிவிக்கப்பட்டதால் பயணிகள் பதற்றமடைந்துள்ளனர். விமான நிலையம் வந்தடைந்ததும், சிங்கப்பூரில் உள்ள சாங்கி விமான நிலையத்திற்கு நேற்று மதியம் 12.15 மணிக்கு புறப்பட வேண்டிய யுஎல் 308 என்ற விமானம் சுமார் ஐந்து மணி நேரம் தாமதமாக புறப்படும் என பயணிகளுக்கு அறிவிக்கப்பட்டது. இந்த விமானம் நேற்று மாலை சுமார் 5.00 மணியளவில் சிங்கப்பூருக்கு புறப்பட்டது. இந்த விமானத்தில் சிங்கப்பூர் வந்த பயணிகள் உணவு பெறுவதற்காக டோக்கன் வழங்கப்பட்ட போதும் உணவு கிடைக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
அத்துடன், கடமையில் இருந்த உத்தியோகத்தர்கள் இது தொடர்பில் விசாரிக்க வருகைத்தராமையினாலும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அவசர தொலைபேசி இலக்கமான 011-7771979 என்ற தொலைபேசி அழைப்புகளுக்குப் பதிலளிக்காமையினாலும் பயணிகள் மேலும் சிரமப்பட்டனர். இதேவேளை, நேற்று முன்தினம் அதிகாலை சிங்கப்பூர் செல்ல வேண்டிய விமானத்தில் ஏற்பட்ட பிரச்னையால், வணிக வகுப்பு பயணிகள் சிலர், இந்தோனேசியாவின் ஜகார்த்தா வழியாக சிங்கப்பூருக்கு மற்றொரு விமானத்தில் செல்ல நேரிட்டது.