இலங்கை

‘சமாதான துவிச்சக்கரவண்டி பயணம்’ நீர்கொழும்பு முதல் யாழ்ப்பாணம் வரை… துவிச்சக்கரவண்டியில் சாதனை முயற்சி!

இன்று (25) 67 வயதுடைய நபர் ஒருவர் துவிச்சக்கரவண்டியில் நீர்கொழும்பு கொச்சிக்கடை பம்புக்குளிய தேவாலயம் முன்னாலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிய 24 மணிநேர சாதனை பயணத்தில் ஈடுபட்டு பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார். ‘சமாதான துவிச்சக்கரவண்டி பயணம்’ என்ற தொனிப்பொருளில் அவர் இந்த துவிச்சக்கரவண்டி பயணத்தில் ஈடுபடவுள்ளார்.

24 மணித்தியாலங்களுக்குள் யாழ் செல்ல திட்டம்
சாதனையில் ஈடுபட்டுள்ள ரிச்சர்ட் பெர்னாந்து நுவன் புள்ளே என்ற இந்த நபர், 361 கிலோமீட்டர் தூரத்தை துவிச்சக்கரவண்டியில் 24 மணித்தியாலங்களுக்குள் கடந்து யாழ்ப்பாணத்தை சென்றடையவுள்ளதாக கூறப்படுகிறது. பயணத்தை ஆரம்பிக்க பம்புக்குளிய பிரதேசத்தில் உள்ள முதியவரது இல்லத்தில் இருந்து அவர் மேளதாள வாத்தியத்துடன் பிரதேசவாசிகளால் பம்புக்குளிய தேவாலயம் வரை ஊர்வலமாக அழைத்துவரப்பட்டார்.

தொடர்ந்து பம்புக்குளிய தேவாலயத்தில் இடம்பெற்ற சர்வமத தலைவர்களின் ஆசீர்வாதத்தை பெற்றுக்கொண்ட பின்னர், பிற்பகல் 12.45 மணியளவில் அவர் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதேவேளை இவர், கடந்த வருடம் நவம்பர் 25ஆம் திகதி நீர்கொழும்பு, கொச்சிக்கடை பிரதேசத்தில் இருந்து மடு தேவாலயம் வரை 13 மணித்தியாலங்களுக்குள் துணிச்சக்கரவண்டியில் சென்று சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Back to top button