1, 10, 19, 28 தேதியில் பிறந்தவர்கள் எந்த நவகிரகத்தை வழிபட்டால் முன்னேறலாம் தெரியுமா ?

1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்கள் ஒன்றாம் எண்ணுக்குரியவர்கள்.
இவர்கள் விதி எண் 1-ஆக அமையப் பெற்றவர்கள், பெயர் எண் 1-ஆக அமையப் பெற்றவர்கள், சிம்ம ராசி, லக்னக்காரர்கள், கிருத்திகை, உத்திரம், உத்திராட நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் ஆகியோருக்கு சூரியன் மூலம் சாதக பலன்கள் கிடைக்கும்.
சூரியன் ஜோதிடத்தில் ஆத்மாவின் அதிபதியாகக் கருதப்படுகிறது. ஒருவரது ஜாதகத்தில் சூரியன் பலம் பெற்றிருந்தால், அவர்கள் தன்னம்பிக்கை, தைரியம், தலைமைத் திறன் போன்றவற்றைக் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய முடியும்.
இவர்களின் மதிப்பு உயரும், தங்களைப் பற்றிய நம்பிக்கையைப் பெறுவார்கள், பிறரால் பாராட்டப்படுவார்கள். அவர்களின் உடல் சக்தி அதிகரிக்கும், அவர்கள் பராக்கிரமம் கொண்டவர்களாக மாறுவார்கள், அவர்களின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். அவர்களின் வலது கண் பார்வை பலப்படும், அவர்களின் இதயம் வலுவாக இருக்கும். தந்தையாலும் அரசாங்கம் மூலமும் அனுகூலம் ஏற்படும். இந்த நபர் தங்கள் தந்தையின் ஆதரவைப் பெறுவார்கள். அவர்கள் அரசாங்கத்தால் ஊக்குவிக்கப்படுவார்கள்.
உங்கள் உத்தியோக வாழ்க்கையில் உயர் பதவி கிடைத்து, பிறரை வேலை வாங்கும் தகுதி உங்களுக்கு ஏற்படும்.அரசியல் ஞானம் அதிகம் இருப்பதால், அரசியல் துறையில் சிறந்து விளங்க வாய்ப்பு உண்டு. மருத்துவம், விஞ்ஞானம், எரிபொருள், சூரிய சக்தி போன்ற துறைகளில் உங்கள் திறமையால் வருவாய் பெறுவீர்கள்.உஷ்ணாதிக்கம் அதிகம் உள்ளவராக காணப்படுவீர்கள். கம்பீரமான தோற்றம் கொண்டவராக இருப்பீர்கள், காடு, மலை போன்ற இடங்களில் வசிப்பதை விரும்புவீர்கள். சூடான உணவை ரசித்து உண்பீர்கள்.
பாதக பலன்கள்
மாறாக நீசம், பகை, பாபக் கிரகச் சேர்க்கை, பாபக் கிரகப் பார்வை, பாப கர்த்தரி யோகத்தில் (சூரியனுக்கு இருபுறமும் செவ்வாய், சனி, ராகு, கேது இருப்பது) இருந்து, மிகவும் பலவீனமாக இருந்தால் குறிப்பிட்ட ஜாதகருக்குக் கெடு பலன்கள் உண்டாகும். மேற்சொன்ன சுபபலன்கள் கிடைக்காமல் போகும். பித்ரு தோஷம் ஏற்படும். அரசாங்க தண்டனை பெறவோ, அபராதம் கட்டவோ வேண்டிவரும்.
பலன் தரும் வழிபாடுகள்
ஜாதகத்தில் சூரிய பலம் குறைந்தவர்கள் சூரியனார் கோயில் சென்று வழிபடுவது நல்லது.சூரியனின் கிழமை ஞாயிறு, அன்று காலை சூரிய உதயத்திலிருந்து ஒரு மணி நேரத்துக்குள் அல்லது 11 மணி முதல் 12 மணிக்குள் குரு ஹோரையிலும் பரிகாரம் செய்யலாம்.
சூரியனுக்கு செந்தாமரை மலர் சூட்டி, செந்நிறப் பட்டு ஆடை அணிவித்து, அர்ச்சனை செய்யலாம். கோதுமை தானம் கொடுப்பது நல்லது. சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து, தானும் உண்டு பிறருக்கும் கொடுக்கலாம்.
இவ்வாறான வழிபாடுகளின் மூலம் பாதக பலன்களை நீக்கி நன்மை பெறலாம்.