இலங்கை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பேர்லின் குளோபல் மாநாட்டில் நிகழ்த்தவுள்ள ஆரம்ப உரை

பேர்லின் குளோபல் மாநாட்டின் முதல் நாள் தலைவர்கள் உரையாடல் அமர்வில் ஆரம்ப உரையை வழங்குவதற்காக இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த வாரம் ஜேர்மனி செல்லவுள்ளார். கியூபாவில் நடைபெற்ற ஜி77 உச்சி மாநாடு மற்றும் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அமர்வுகளில் கலந்து கொண்ட ரணில் விக்ரமசிங்க, நேற்றே நாடு திரும்பினார். இந்தநிலையிலேயே அவரின் அடுத்த விஜயம் இடம்பெறவுள்ளது. பேர்லின் குளோபல் உரையாடல் முடிவடைந்த பின்னர், இலங்கை ஜனாதிபதி, ஜேர்மனிய அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் மற்றும் பிற அரசியல் மற்றும் வணிகத் தலைவர்களை சந்திக்கவுள்ளார்.

பேர்லின் குளோபல் டயலொக் என்பது தற்போதைய புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் வகையில் ஜேர்மனின் உயர்மட்ட உலகளாவிய கலந்துரையாடல் முயற்சியாகும். அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் தவிர, ஐரோப்பிய சபையின் தலைவர் சார்லஸ் மைக்கேல் மற்றும் பெல்ஜிய பிரதமர் அலெக்சாண்டர் டி குரூ போன்றோர் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

அதேநேரம் ஜனாதிபதியின் தலைமை அதிகாரி சாகல ரத்நாயக்க, வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன, ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் ஆர்.எச்.எஸ். சமரதுங்க மற்றும் நிதியமைச்சரின் ஆலோசகர் தேஸால் டி மெல் ஆகியோர் பேர்லினில் இரண்டு நாள் தங்கியிருக்கும் போது ஜேர்மன் சகாக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

இதேவேளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளைய அமைச்சரவைக் கூட்டத்திற்கு தலைமை தாங்கவுள்ளார். கொழும்பில் இருக்கும் போது ஜனாதிபதி விக்ரமசிங்க, இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை சந்தித்து, விரிவாக்கப்பட்ட நிதி வசதியில் இருந்து இலங்கைக்கான இரண்டாவது தவணைக் கொடுப்பனவு பற்றி கலந்துரையாடவுள்ளார்.

Back to top button