லண்டன்

லண்டனில் பொலிஸ் வேடத்தில் களமிறங்கிய பிரதமர் ரிஷி சுனக்- ஒரே நாளில் 105 பேர் கைது!

விசா காலம் முடிவடைந்தும் பிரித்தானியாவில் சட்டவிரோதமாக தங்கி பணியாற்றும் நபர்களுக்கு எதிரான நடவடிக்கையில் பிரதமர் ரிஷி சுனக்கும் அதிகாரிகளுடன் களமிறங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. வியாழன் பகல் வடமேற்கு லண்டனில் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அதிகாரிகள் குழு அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளது. வெளிநாட்டவர்கள் தங்கள் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருப்பதுடன், உணவு விநியோக நிறுவனங்களில் பணியாற்றியும் வருகின்றனர்.

மேலும், தொடர்புடைய சோதனை நடவடிக்கையானது அதிகாலை 5 மணியளவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் கத்திக்குத்து தாக்குதலை தடுக்கும் வகையிலான உடை அணிந்து பிரதமர் ரிஷி சுனக்கும் களமிறங்கியுள்ளார். வடமேற்கு லண்டனில் சந்தேக நபர்கள் தங்கியிருப்பதாக அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ள நிலையில், பிரதமர் மற்றும் அதிகாரிகள் குழு அப்பகுதிக்கு விரைந்துள்ளது. இதில், குறிப்பிட்ட குடியிருப்புக்குள் அதிரடியாக நுழைந்த பொலிசாருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இருப்பினும் பிரித்தானியா முழுவதும் மொத்தம் 159 குடியிருப்புகளில் சுமார் 300 அதிகரிகள் அதிரடி சோதனை முன்னெடுத்துள்ளனர். இதில் 105 பேர்கள் கைதானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன், பிரதமர் சுனக்கை பொறுத்தமட்டில், சிறு படகுகளில் பிரித்தானியாவுக்குள் குடியேறும் மக்களை தடுக்கும் திட்டத்தின் ஒருபகுதியே இந்த நடவடிக்கை. பிரித்தானியாவுக்குள் ஒரு ஆண்டில் சராசரியாக சட்டவிரோதமாக குடியேறும் மக்களின் எண்ணிக்கை 606,000 என குறிப்பிட்டுள்ள பிரதமர் சுனக், இந்த எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார். மேலும் புலம்பெயர் மக்களை தங்கவைக்கும் பொருட்டு உருவாக்கப்பட்டுள்ள படகுகளில் ஒன்று இன்னும் சில நாட்களில் Dorset பகுதிக்கு வந்து சேரும் எனவும், இதில் 500 படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அத்துடன் ருவாண்டாவுக்கு அனுப்பி வைக்கப்படும் புலம்பெயர் மக்களின் விமானம் செப்டம்பர் மாத தொடக்கத்தில் புறப்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறுகின்றனர்.

Back to top button