ஏனையவை

அரசாங்க ஊழியர்களுக்கான இடமாற்றம் தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை

பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபா வாழ்வாதார கொடுப்பனவை அரசாங்கம் வழங்கியுள்ளது. எனவே சுகாதார தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் நியாயமற்றது என நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராராச்சி தெரிவித்துள்ளார். அரச ஊழியர்களின் இடமாற்றங்கள் வழங்கப்படாமைக்கு அரச ஊழியர்களின் செயல்திறனற்ற வேலைகளே காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே​யே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அத்துடன், மக்களை நெருக்கடிக்குள் தள்ளும் வகையில் வேலை நிறுத்தங்களை மேற்கொள்வது நியாயமற்ற செயல் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். மக்கள் பிரதிநிதிகளை தூற்றுவதால் மாத்திரம் நாட்டை கொண்டுச் செல்ல முடியாதெனவும், அரச அதிகாரிகள் செயல்திறனுடன் மக்களுக்கு சேவை வழங்க கடமைப்பட்டுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்தும் குறிப்பிடுகையில், அரச நிறுவனங்களுக்குள் பெருமளவான அதிகாரிகள் மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குகின்றனர். ஆனால் சில அதிகாரிகள் பொறுப்பற்ற விதத்தில் செயல்படுவது தெரியவந்துள்ளது. மக்களுக்கான சேவைகள் உரிய வகையில் வழங்கப்படுவதில்லை என்பதையும் காண முடிகிறது. சில நேரங்களில் அரச சேவைகளின் நியமனங்கள் மற்றும் இடமாற்றங்கள் வழங்கப்படாமல் இருப்பதற்கும் அரசாங்க அதிகாரிகள் சிலரது செயல்திறனற்ற செயற்பாடுகளே காரணமாக உள்ளன.

அரசியல் அதிகாரத்துக்குள் காணப்படும் பிழைகளை அவர்கள் சுட்டிக்காட்டினாலும், உயர் மட்ட அதிகாரிகள் சிலர் பொறுப்பற்ற விதத்தில் செயற்படுகின்றனர். அரசியல்வாதிகளை தூற்றுவதால் மாத்திரம் நாட்டை கொண்டுச் செல்ல முடியாது. அரச அதிகாரிகள் தமது தனிப்பட்ட நோக்கங்களுக்காகச் செயற்படவும் முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

Back to top button