பொருளாதார நெருக்கடி குறித்து மகிந்தவுக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்பு: குடியுரிமை பறிபோகும் வாய்ப்பு

மகிந்த ராஜபக்ச வெட்கம் என்ற ஒன்று இருப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். மத்தேகொட பிரதேசத்தில் இடம்பெற்ற கட்சி பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். பொருளாதார நெருக்கடிக்கு பிரதிவாதிகளாக உச்ச நீதிமன்றத்தினால் பெயரிடப்பட்டுள்ள ராஜபக்சக்களுக்கு எதிராக மாவட்ட நீதிமன்றங்களில் நஷ்டஈடு கோருவதற்கு மக்கள் முன்வர வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மருந்து கிடைக்காமல் இறந்தவர்களின் உறவினர்கள், எரிவாயு வரிசையில் இறந்தவர்களின் உறவினர்கள், எரிவாயு வெடித்து இறந்தவர்களின் உறவினர்கள், எரிபொருள் வரிசையில் இறந்தவர்களின் உறவினர்கள் இதில் முன்னிலை வகிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பொருளாதாரக் குற்றவாளிகள் மட்டுமே நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டதாகவும், எரிபொருள் வரிசையை உருவாக்கிய ஆற்றல் குற்றவாளிகளும் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனடிப்படையில், எரிசக்தி நெருக்கடியை உருவாக்கியவர்கள் குறித்து அடுத்த வழக்கை விசாரிக்க வேண்டும் என் அவர் மேலும் தெரிவித்துள்ளார். ராஜபக்ச சகோததர்களுக்கு எதிராக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை அடுத்து, அவர்களின் குடியுரிமையை பறிக்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.