இறக்குமதிக்கான தடைகளை நீக்குவது தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட தகவல்
சுங்க திணைக்களத்தின் வருமானம் இறக்குமதி வரியிலேயே தங்கியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளர்.
எனினும் டொலர் நெருக்கடியைக் கருத்திற் கொண்டு சுமார் 400க்கும் அதிகமான பொருட்களுக்கு இறக்குமதித் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இவ்வாண்டின் முதற் காலாண்டில் சுங்க திணைக்களத்திடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட வருமான இலக்கினை அடைய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
இறக்குமதித் தடை
2021 இல் 485 பொருட்களுக்கும் , கடந்த ஆண்டு 750 பொருட்களுக்கும் இறக்குமதித் தடை விதிக்கப்பட்டது. சுங்க திணைக்களத்தின் வருமானம் வீழ்ச்சியடைந்ததில் இது பாரிய தாக்கத்தினை செலுத்துகின்றது.
இறக்குமதித்தடைகள் நடைமுறையிலுள்ள போதிலும் , பொருளாதார வளர்ச்சி வேகம் மறை பெறுமானத்திலேயே காணப்படுகிறது. எவ்வாறிருப்பினும் இவற்றினால் வீணாகக் கலவரமடையாமல் எமது இலக்கை நோக்கிப் பயணிக்க வேண்டும்.
அதே வேளை மருந்துகள் , தொழிற்சாலை துறைகளுடன் தொடர்புடைய பொருட்கள் மற்றும் வீட்டுப் பாவனைப் பொருட்கள் என்பவற்றுக்கான இறக்குமதித் தடைகளை படிப்படியாக நீக்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
சுங்க வரி திணைக்களம்
நிதி அமைச்சு மாத்திரமின்றி மத்திய வங்கியும் இது குறித்து விசேட அவதானம் செலுத்தியுள்ளது. எவ்வாறிருப்பினும் நாட்டுக்கு எவ்வித தீங்கும் ஏற்படாத வகையிலேயே எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படும் என்றார்.
சுங்க திணைக்களத்தின் வரி வருமானம் குறித்து சுங்க அதிகாரிகளுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.