லண்டன்

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் “நான் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவன்…” வெளிப்படையாக பேசிய ரிஷி சுனக்

நான் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவன், என் மனைவியும் அவரது குடும்பத்தினரும் இந்தியக் குடிமக்கள். அவர்களுக்கு இந்தியாவில் சொத்து உள்ளது என பிரித்தானிய நாடாளுமன்றத்தில் வெளிப்படையாக பேசினார் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக். இந்தியப் பயணம், பிரித்தானிய பிரதமர் ரிஷியின் நடவடிக்கைகளில் மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளதுபோல் தெரிகிறது. எப்போது பார்த்தாலும் ரிஷியின் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்துக்கள் குறித்தே பிரித்தானிய ஊடகங்கள் பேசிக்கொண்டிருக்க, இந்தியப் பயணத்தை முடித்து பிரித்தானியா திரும்பிய ரிஷியின் பேச்சில் ஒரு உறுதி தெரிகிறது.

ஆம், நான் இந்திய வம்சாவளியினர்தான், நானும் என் குடும்பத்தினரும் இந்திய வம்சாவளியினர், என் மனைவியும் அவரது குடும்பத்தினரும் இந்தியக் குடிமக்கள். ஆமாம், அவர்களுக்கு இந்தியாவிலிருந்து வருமானம் வரத்தான் செய்கிறது, அதற்கென்ன இப்போது? என்பது போல, பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே பேசிவிட்டார் ரிஷி.

பிரதமர் ஒளிவு மறைவு இல்லாமல் இருக்கவேண்டும் என எதிர்பார்க்கிறோம் என சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறிக்கொண்டே இருக்க, இதுதான் உண்மை, ஒளிவு மறைவு இல்லாமல் என் மனைவிக்கு இந்தியாவிலிருந்து வருவாய் வருகிறது என்பதையும் சொல்லிவிட்டேன் என்னும் பாணியில் பேசியுள்ளார் ரிஷி! இதற்கிடையில், எங்கே இந்தியாவுக்குப் போனதும், இந்தியர்கள் யார் வேண்டுமென்றாலும் பிரித்தானியாவுக்கு வரலாம் என்று பிரதமர் கூறிவிடுவாரோ என்று பயந்துகொண்டே இருந்த பிரித்தானிய உள்துறைச் செயலருக்கும் பதில் சொல்வதுபோல, நான் இந்தியாவுக்குச் சென்றதற்கு மூன்று நோக்கங்கள். அவை, ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு தூதரக மட்டத்தில் அழுத்தத்தை அதிகரிப்பது, பருவநிலை தொடர்பில் நடவடிக்கை மற்றும் இந்தியாவுடனான உறவுகளை வலுப்படுத்துதல், அவ்வளவுதான் என்றும் கூறிவிட்டார் ரிஷி.

Back to top button