இலங்கைக்கு ஹெலிகொப்டர்களை வழங்க முன்வந்துள்ள இத்தாலி!

இலங்கைக்கு ஹெலிகொப்டர்களை வழங்கவுள்ளதாக இத்தாலி தெரிவித்துள்ளது.
மனிதக் கடத்தலுக்கு எதிராக இலங்கை எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், ஹெலிகொப்டர்களை வழங்க இத்தாலி விருப்பம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற சந்திப்பின்போதே இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் ரீட்டா ஜி. மன்னெல்லா இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான இந்த சந்திப்பின் போது, இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இரு நாடுகளுக்குமிடையிலான சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது, முதலீட்டு வாய்ப்புகளை அதிகரிப்பது, கலாசார நிகழ்ச்சிகளை பரிமாறிக்கொள்வது, மற்றும் இக்கட்டான நேரத்தில் இலங்கைக்கு இத்தாலி வழங்கக்கூடிய ஆதரவு குறித்தும் இதன்போது பேசப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.